91 தொகுதி முதல்கட்ட தேர்தல் : 213 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்


91 தொகுதி முதல்கட்ட தேர்தல் : 213 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்
x
தினத்தந்தி 6 April 2019 1:27 PM IST (Updated: 6 April 2019 3:35 PM IST)
t-max-icont-min-icon

91 தொகுதியில் நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 213 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு கூறி உள்ளது.

புதுடெல்லி

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 11-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை இந்த தேர்தல் நடக்கிறது.

முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் 20 மாநிலங்களில் உள்ள 91 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முதல்கட்ட பாராளுமன்ற தேர்தலில்  ஆந்திரா-25, அருணாசல பிரதேசம்-2, பீகார்-4, சத்தீஸ்கர்-1, ஜம்மு-காஷ்மீர்-2, மகாராஷ்டிரா-7, மணிப்பூர்-1, மேகாலயா-2, மிசோரம்-1, நாகலாந்து-1, ஒடிசா-4, சிக்கிம்-1, தெலுங்கானா-17, திரிபுரா-1, உத்தரபிரதேசம்-8, உத்ரகாண்ட்-5, மேற்கு வங்காளம்-2, அந்தமான் நிக்கோபார் தீவுகள்-1, லட்சத்தீவுகள்-1 ஆகியவற்றுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

ஏப்ரல் 11-ந்தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்டது. ஓட்டுப்பதிவிற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன.

முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும்  1279 வேட்பாளர்களில் 1266 பேர் அபிடவுட்  தாக்கல் செய்து உள்ளனர். இதில் 213 வேட்பாளர்கள் மீது  கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கடுமையான குற்றங்களுக்கு எதிராக  குற்றவழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளன.

வேட்பாளர்கள்  தாக்கல் செய்த அபிடவுட்டை ஆய்வு செய்து, தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் 213 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன . மீதி 13 வேட்பாளர்களின் வாக்குமூலங்கள், முறையான ஸ்கேன் செய்யப்பட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்கள் கிடைக்காததால், பகுப்பாய்வு செய்யப்படவில்லை.

அந்த அறிக்கைபடி 1266 வேட்பாளர்களில்  1 சதவீத வேட்பாளர்கள்  தீவிர குற்றவியல் வழக்குகள் தங்களுக்கு எதிராக உள்ளதாக கூறி உள்ளனர். 12 சதவீதம்  தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். 10 வேட்பாளர்கள்  தங்களுக்கு எதிராக கொலை  வழக்கு (இந்திய தண்டனை சட்டம் 302) உள்ளதாக கூறி உள்ளனர்.

25 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு  (இந்திய தண்டனை சட்டம் 307) இருப்பதாக கூறி உள்ளனர். 4 வேட்பாளர்கள் கடத்தல் வழக்கு இருப்பதாகவும், 16 பேர் பெண்களுக்கு எதிரான வழக்கு இருப்பதாகவும் 12 வேட்பாளர்கள் அவதூறாக பேசியதாகவும் தங்களுக்கு எதிராக  வழக்கு இருப்பதாக கூறி உள்ளனர்.

91 தொகுதிகளில் 31 தொகுதிகள் பதற்றமான தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக பாரதீய ஜனதாவின்  83 வேட்பாளர்களில் 30 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.  காங்கிரஸ் 83 வேட்பாளர்களில் 35 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன.பகுஜன் சமாஜ கட்சி வேட்பாளர்கள் 35 பேரில் 8 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன. 

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் 25 பேரில் 13 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் 25 பேரில் 4 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி வேட்பாளர்கள் 17 பேரில் 5 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன என கூறப்பட்டு உள்ளது.

Next Story