சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு: போலீஸ் அதிகாரியை கைது செய்ய அனுமதி கேட்டு சி.பி.ஐ. மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கு: போலீஸ் அதிகாரியை கைது செய்ய அனுமதி கேட்டு சி.பி.ஐ. மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x
தினத்தந்தி 8 April 2019 2:25 AM IST (Updated: 8 April 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் மேற்கு வங்க போலீஸ் அதிகாரியை கைது செய்ய அனுமதி கேட்டு சி.பி.ஐ. தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா சிட் பண்ட் மற்றும் ரோஸ் வாலி நிதி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஊழல் விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழுவில் கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இருந்தார்.

இவர் மேற்படி ஊழல் தொடர்பான ஆதாரங்கள் பலவற்றை மறைத்ததாகவும், பல உண்மைகளை விட்டு விட்டதாகவும் புகார் எழுந்தது. எனவே சாரதா சிட் பண்ட் மோசடி குறித்து தற்போது விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள், ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற போது, மாநில போலீசாருக்கும், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே இந்த விவகாரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்து சென்றனர்.

அங்கு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ் குமாரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர். எனினும் அவர் சாரதா சிட் பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். அதன்படி அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு உண்மைகள் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ராஜீவ் குமாரை கைது செய்ய அனுமதி கேட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சாரதா சிட் பண்ட் மோசடியில் நிலவும் முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ராஜீவ் குமாரின் கைது நடவடிக்கை தேவைப்படுவதாக கூறியுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், எனவே அவரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதைப்போல சாரதா சிட் பண்ட் மோசடி விசாரணைக்கு மேற்கு வங்காள அதிகாரிகள் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய அறிவுறுத்தல்களை அவர்கள் தீவிரமாக கடைப்பிடிக்கவும் உத்தரவிட வேண்டும் என சி.பி.ஐ. தனது மனுவில் கேட்டுக்கொண்டு உள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.


Next Story