ராகுல் போட்டியிடும் வயநாட்டில் தேர்தலை புறக்கணிக்க மாவோயிஸ்டுகள் அழைப்பு போஸ்டர்
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் தேர்தலை புறக்கணிக்க கூறி மாவோயிஸ்டுகள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு,
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதி மக்களவை உறுப்பினராக 3 முறை வெற்றி பெற்றவர். இதனால் இந்த முறையும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை கேரளாவில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு அவர் அளித்த ஒப்புதலை அடுத்து வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதனால் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளிலும் அவர் போட்டியிடுகிறார்.
இதற்காக கடந்த 4ந்தேதி தனது சகோதரி பிரியங்காவுடன் வயநாடு வந்த ராகுல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். பின் பேரணி நடத்தி கட்சியின் வலிமையை காட்டினார். இந்நிலையில், வயநாடு மக்களவை தொகுதிக்கு உட்பட்ட முண்டக்கை நகரில் தேர்தலை புறக்கணிக்கும்படி கூறி இன்று காலை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில், விவசாயிகள் மற்றும் வாழைத்தோட்ட தொழிலாளர்கள் ஏப்ரல் 23ந்தேதி நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனை அடுத்து பாதுகாப்பிற்கு அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கூடுதல் துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நிலைமையை போலீசார் கண்காணித்து வருகின்றனர். விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
கடந்த மார்ச் 6ந்தேதி வயநாடு பகுதியில் மாவோயிஸ்டு தலைவர் ஜலீல் என்பவர் போலீசாருடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்ட பின் போலீசார் அங்கு அதிக எச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story