தேசிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம் + "||" + Narendra Modi biopic: SC refuses to intervene in its release

பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்

பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்
பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,

‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில்  நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.

23 மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்தன.

ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினர். அதில் “தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்” என்று கூறினர்.

இதே கோரிக்கையை முன்வைத்து டெல்லி, மும்பை உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகின. எனவே, படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் படத்தின் வெளியீட்டு தேதி இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், பிஎம் நரேந்திரமோடி படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். 

பிஎம் நரேந்திரமோடி படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழே தராத நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்து, மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.  பிஎம் நரேந்திர மோடி படம் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.