இந்திரா காந்தி பிரதமரான இந்தியாவின் 4வது மக்களவை தேர்தல்


இந்திரா காந்தி பிரதமரான இந்தியாவின் 4வது மக்களவை தேர்தல்
x
தினத்தந்தி 10 April 2019 4:21 PM IST (Updated: 10 April 2019 4:21 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் 4வது மக்களவை தேர்தலில் இந்திரா காந்தி பிரதமரானார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் முதன்முறையாக 1951ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடந்தது.  இமாசல பிரதேசத்தில் உள்ள சினி என்ற பகுதியில் வாழ்ந்து வந்த புத்த மதத்தினர் முதன்முறையாக வாக்களித்த இந்தியர்கள் ஆவர்.  அவர்கள் கடந்த 1951ம் ஆண்டு அக்டோபர் 25ல் வாக்களித்தனர்.  எனினும் மற்ற வாக்காளர்கள் அனைவரும் சில மாதங்கள் கழித்து கடந்த 1952ம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.  இந்த தேர்தல் பிப்ரவரி 21ந்தேதி முடிவடைந்தது.

இந்த தேர்தலில் 21 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.  முதல் தேர்தலிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்தது.  மொத்தம் உள்ள 489 இடங்களில் 364 இடங்களில் வெற்றி பெற்று ஜவஹர்லால் நேரு ஆட்சி பொறுப்பேற்றார்.

இதன்பின் 1957ம் ஆண்டு 2வது பொது தேர்தல் நடந்தது.  இந்திய அரசியலமைப்பின்படி முதல் தேர்தலுக்கு பின் 5 வருடங்கள் கழித்து, பிப்ரவரி 24ந்தேதி முதல் ஜூன் 9ந்தேதி வரை இந்த தேர்தல் நடந்தது.

நாடாளுமன்ற மக்களவைக்கான 494 தொகுதிகளில் இந்த முறை 371 தொகுதிகளை இந்திய தேசிய காங்கிரஸ் எளிதில் கைப்பற்றி ஜவஹர்லால் நேரு தலைமையில் 2வது முறையாக ஆட்சி அமைத்தது.

இதன்பின் 3வது பொது தேர்தல் கடந்த 1962ம் ஆண்டு பிப்ரவரி 19 முதல் 25ந்தேதி வரை நடந்தது.  முந்தைய தேர்தல்களில் சில தொகுதிகளுக்கு 2 உறுப்பினர்களும், சில தொகுதிகளுக்கு ஒற்றை உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.  ஆனால் 3வது பொது தேர்தல் நடைபெறுவதற்கு முன் பல உறுப்பினர் கொண்ட தொகுதிகள் ஒழிக்கப்பட்டன.  இதனால் ஒரு தொகுதிக்கு ஓர் உறுப்பினர் என்ற முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த தேர்தலிலும் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றொரு மகா வெற்றியை பெற்றது.  மொத்தமுள்ள 494 தொகுதிகளில் 361 தொகுதிகளை கைப்பற்றியது.  44.7 சதவீதம் அளவிலான வாக்குகளை பெற்றது.  இது முந்தைய இரு தேர்தல்களை விட சற்று குறைவு ஆகும்.  ஆனால் அக்கட்சி மக்களவையில் 70 சதவீத தொகுதிகளை பெற்றிருந்தது.

காங்கிரசுக்கு எதிராக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி 29 தொகுதிகளையே கைப்பற்றியது.  இதன் வாக்கு சதவீதம் 9.94 ஆக இருந்தது.  இக்கட்சியை விட சுயேச்சைகள் அதிக அளவிலான வாக்கு சதவீதத்தினை (11.05) பெற்றிருந்தனர்.

இந்தியாவில் 4வது மக்களவை தேர்தல் கடந்த 1967ம் ஆண்டு பிப்ரவரி 17ந்தேதி முதல் 21ந்தேதி வரை நடந்தது.  இந்த தேர்தலில் 26 தொகுதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டன.  இதனால் மொத்தம் 520 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த முறை இந்திரா காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 4வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது.  அக்கட்சி 54 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது.  மற்ற எந்த கட்சியும் 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகளையோ அல்லது தொகுதிகளையோ கைப்பற்றவில்லை.

எனினும், ஜவஹர்லால் நேரு தலைமையிலான முந்தைய மூன்று தேர்தல்களில் அக்கட்சி பெற்ற வெற்றியை விட இந்த தேர்தலில் குறைவான வெற்றியையே பெற்றிருந்தது.

இந்தியாவின் 5 ஆண்டு திட்டத்தில் (1961-1966) பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதம் ஆக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.  ஆனால் வளர்ச்சி விகிதம் உண்மையில் 2.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

ஜவஹர்லால் நேரு மறைவுக்கு பின் லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் 2வது பிரதமரானார்.  இவரது தலைமையில் கடந்த 1965ம் வருடம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போரில் ஈடுபட்டது.  இதில் ஜெய் ஜவான் ஜெய் கிசான் (ராணுவ வீரர் வாழ்க, விவசாயி வாழ்க) என்ற வாசகம் பிரபலம் அடைந்தது.

ஜவஹர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகிய இரு பெரும் தலைவர்களின் மறைவுக்கு பின் இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.  ஆனால் இந்திரா மற்றும் துணை பிரதமர் மொரார்ஜி தேசாய் இடையே மோதல் போக்கு நீடித்தது.  கட்சிக்கு யார் தலைமை ஏற்பது என்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.

இந்த தேர்தலில் குஜராத், மதராஸ் (சென்னை), ஒரிசா (ஒடிசா), ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா மற்றும் டெல்லி ஆகிய 7 மாநிலங்களில் அக்கட்சி அதிக இழப்புகளை சந்தித்தது.  இதனால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 283 தொகுதிகளிலேயே வெற்றி பெற்றிருந்தது.  சுதந்திரா கட்சி 44 தொகுதிகளை கைப்பற்றி 2வது இடத்தில் இருந்தது.

இதேபோன்று இந்த தேர்தலில் பாரதீய ஜனதா சங்கம் 35 தொகுதிகளிலும், திராவிட முன்னேற்ற கழகம் 25 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 23 தொகுதிகளிலும், சம்யுக்தா சமூக கட்சி 23 தொகுதிகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.  சுயேச்சைகள் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர்.

Next Story