ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல்
ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மகன், மகள், மருமகன் ஆகியோர் சென்றனர்.
ரேபரேலி,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், கடந்த 2004, 2006-ம் ஆண்டு இடைத்தேர்தல், 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், 5-வது முறையாக அத்தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். 5-வது கட்ட தேர்தல் நாளான மே 6-ந் தேதி, அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
சமீபத்தில், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த தினேஷ் பிரதாப்சிங் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, அவர் அங்குள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பூஜை செய்தார்.
பின்னர், வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு வாகன பேரணியாக சோனியா காந்தி புறப்பட்டார். அவருடன் மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி, மகள் பிரியங்கா, மருமகன் ராபர்ட் வதேரா ஆகியோரும் சென்றனர்.
வாகன பேரணியின் இறுதியில், அலுவலகத்தை அடைந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர், சோனியா காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ரேபரேலியில் போட்டி என்று எதுவும் கிடையாது. நாட்டு மக்கள், பா.ஜனதா மீதும், பிரதமர் மோடி மீதும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவரை மாற்றுவதென முடிவு செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊழல் குறித்து விவாதம் நடத்த பிரதமரின் இல்லத்துக்கே செல்ல தயாராக இருக்கிறேன். அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி விமான ஒப்பந்தம் ஏன் கொடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள நாடு விரும்புகிறது. இந்த பேரத்தில் தவறு நடந்துள்ளது என்பதை சுப்ரீம் கோர்ட்டும் மோப்பம் பிடித்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story