தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன்? கூட்டணிக்காக அ.தி.மு.க.வை நிர்ப்பந்திக்கவில்லை ‘தினத்தந்தி’க்கு பிரதமர் மோடி சிறப்பு பேட்டி


தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன்? கூட்டணிக்காக அ.தி.மு.க.வை நிர்ப்பந்திக்கவில்லை ‘தினத்தந்தி’க்கு பிரதமர் மோடி சிறப்பு பேட்டி
x
தினத்தந்தி 13 April 2019 12:15 AM GMT (Updated: 13 April 2019 12:54 AM GMT)

கூட்டணிக்காக அ.தி.மு.க.வை பாரதீய ஜனதா நிர்ப்பந்திக்கவில்லை என்று, ‘தினத்தந்தி’க்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி, 

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடி சிறப்பு பேட்டி

இந்த பரபரப்பான சூழ் நிலையில், பிரதமர் மோடி நேற்று டெல்லியில் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
‘தினத்தந்தி’
குழும செய்தியாளர்கள் எஸ்.சலீம், அசோக வர்ஷினி ஆகியோர் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேட்டி கண்டனர்.

அப்போது பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தேர்தல் சமயத்தில் வேலைப்பளு நிறைந்திருக்கும் போதும், தாங்கள் ஓய்வில்லாமல், உற்சாகமாக பணியாற்றி வருகிறீர்கள். ஓய்வில்லா உழைப்பை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவும் பாராட்டி உள்ளார். இடைவெளி இல்லாமல் பணியாற்ற தங்களுக்கு, எங்கிருந்து சக்தி கிடைக்கிறது?

பதில்:- நமது சமூகத்தில் உள்ள சராசரி மனிதனின் அன்றாட உழைப்பை நான் உற்று நோக்குகிறேன். அது மட்டுமல்லாமல் வெயில், பனி, பாலைவனம் என பாராமல் காவல் காக்கும் ராணுவ வீரர்கள், தீபாவளி, ராக்கி உள்ளிட்ட பண்டிகைகளில் பணியாற்றும் காவல்துறையினர், இரவு-பகல் பாராது உழைக் கும் விவசாயிகள் நாட்டிற்காக அரும் பணியாற்றுகின்றனர். இவர்களை பார்த்துதான், என்னால் முடிந்த அளவு, உழைக்க வேண்டும் என எண்ணி அதன்படி செயல்படுகிறேன். இது எனது கடமையே. நாட்டு மக்கள் எனக்கு அளித்திருக்கும் பொறுப்பை உணர்ந்து அவர்களுக்காக நான் ஒவ்வொரு மணித்துளியையும் வீணாக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

ராகுல் காந்தி

கேள்வி:- சார்... நீங்கள் தற்போது 69 வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறீர்கள்... வாழ்க்கை உங்களை எப்படி நடத்துகிறது?

பதில்:- என்னை விட சுகானுபாவர் இல்லை என்றே நான் கூறுவேன். இந்த ஜன நாயக நாட்டில், மக்களுக்கு சேவையாற்றக்கூடிய பெரும் பணி எனக்கு கிடைத்து உள்ளது. இதனை பாக்கியமாக கருதுகிறேன்.

கேள்வி:- ராகுல் காந்தி என்ற பெயரை கேட்டதும் தங்களின் மனதில் தோன்றுவது அன்பா? வெறுப்பா? அல்லது பகைமையா?

பதில்:- இந்த மூன்றில் எதுவும் இல்லை.

கேள்வி:- உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

பதில்:- நான் குறிப்பிட்ட ஒருவரை பற்றி மட்டும் மதிப்பீடு செய்வது சரியில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி மதிப்பீடு செய்ய சொன்னால், நான் சாதாரணமானவன். பா.ஜ.க. அல்லது வேறு கட்சியினருடன் பாகுபாடு இன்றி பழகுபவன்.

தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன்?

கேள்வி:- ராகுல்காந்தி அமேதி, வயநாடு என இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றார். வடஇந்தியாவை போன்றே, தென்னிந்தியாவிற்கு முக்கியத்துவம் அளிக்கவே, வயநாட்டில் போட்டியிடுவதாக ராகுல் குறிப்பிட்டு உள்ளார். இது போல் பிரதமரும் தென்பகுதியில் போட்டியிட வேண்டும் என பா.ஜ.க.வில் ஏதேனும் ஆலோசனைகள் கூறப்பட்டதா, விவாதிக்கப்பட்டதா? கடந்த முறை நீங்கள் 2 தொகுதிகளில் போட்டியிட்டீர்களே?

பதில்:- ஸ்மிரிதி இரானி அமேதியில் வேட்புமனு தாக் கல் செய்த காட்சிகளை பார்த்தாலே தெரிந்து இருக்கும். அவர் (ராகுல் காந்தி) ஏன் வேறு ஒரு தொகுதியை நாடிச் சென்றார் என்று. அரசியலுக்காக ஏதேனும் ஒரு காரணத்தை கூறலாம். ஆனால், பாதுகாப்பு கருதியே, அவர் வேறு ஒரு தொகுதியை தேர்ந்தெடுத்திருக்கலாம். காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி மாநிலங்களை அவர் தேர்வு செய்யவில்லை. கேரளாவை அவர் தேர்வு செய்ததால்தான் அனைவரின் மனதிலும் இந்த கேள்வி எழுகிறது. எனது முடிவை எப்போதும் நான் எடுப்பதில்லை.. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். தேவையில்லாமல் யோசித்து நான் குழப்பி கொள்ள விரும்பவில்லை..

பிரியங்காவுக்கும் முக்கியத்துவம்

கேள்வி:- ராகுல் மட்டுமல்லாது பிரியங்காவுக்கும் காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் தாக்கம் என்னவாக இருக்கும்?

பதில்:- இது காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம். அது அவர்களது குடும்ப கட்சி. எனவே அதனை காப்பாற்ற குடும்பத்தினர் பாடுபடுகின்றனர். செய்துதானே ஆக வேண்டும்.

கேள்வி:- உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்காவின் தாக்கம் என்னவாக இருக்கும்?

பதில்:- இதற்கு பதில் நான் முன்னதாக கூறி விட்டேன்.

பா.ஜ.க. வடமாநில கட்சியா?

கேள்வி:- கர்நாடகம் தவிர தென்னிந்தியாவை பொறுத்தவரை, பா.ஜ.க. வெற்றி பெற ஏன் சிரமப்படுகிறது ?

பதில்:- இது முற்றிலும் மாறுபட்ட கருத்து. பா.ஜ.க. வட மாநிலத்தைச் சார்ந்த கட்சி என்றனர். பிறகு நகர்ப்புறவாசிகளுக்கான கட்சி என்றனர். பின்னர் உயர்வகுப்பினருக்கான கட்சி என்றனர். ஆனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்தவர்கள்தான் பா.ஜ.க. எம்.பி.க்களாக உள்ளனர். நாட்டின் பல்வேறு இடங்களில் எங்களது கட்சியினரே எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். நகர்ப்புற கட்சி என்றனர். ஆனால் கிராமங்களிலும் வெற்றி வாகை சூடி, பஞ்சாயத்துகளை கைப்பற்றினோம். வடமாநில கட்சி என்றனர். ஆனால் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம் இவை அனைத்தும் வடக்கு பகுதியை சார்ந்தது அல்ல. ஆந்திராவிலும் எங்கள் ஆதரவில் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்தில் நாங்கள் இல்லை என கூற முடியாது.

வளர்ந்து வருகிறோம்

கேள்வி:- தென்னிந்தியாவில் பா.ஜ.க. வளர்ச்சியடைய ஏன் சிரமப்படுகிறது?

பதில்:- இல்லவே இல்லை... குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று உள்ளோம். இதுபோல் தென்னிந்தியாவில் நாங்கள் வளர்ந்து வருகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேள்வி:- கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத ஒரு மாற்று அணியை உருவாக்கி மக்களவை தேர்தலை எதிர்கொண்டீர்கள். ஆனால் தற்போது தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் செய்து கொண்டது ஏன்?

பதில்:- திராவிட கட்சிகளுடன் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. 2014-ம் ஆண்டு எங்களது நோக்கம் வேறாக இருந்தது. அப்போது ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். நாங்களும் மாற்று அணியை தேர்ந்தெடுத்தோம். தற்போது, கூட்டணி வைக்க முடிவு செய்து போட்டியிடுகிறோம். இதற்கு முன்பும் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து உள்ளது.

கேள்வி:- மக்களவை தேர்தலில் போட்டியிட கூட்டணிக் காக தி.மு.க.வை தவிர்த்து, அ.தி.மு.க.வை தேர்வு செய்தது ஏன்?

பதில்:- அ.தி.மு.க.வுடன் எங்களுக்கு நீண்ட கால நட்பு உள்ளது. நாடாளுமன்றத்திலும் எங்களுக்கு பூரண ஆதரவை தந்த கட்சி அ.தி.மு.க.

கேள்வி:- ஆனால் ஒரு சில கட்சிகள், அ.தி.மு.க.வை கூட்டணிக்காக நிர்ப்பந்தப்படுத்தியதாக குற்றம் சாட்டுகின்றனரே?

பதில்:- அரசியலில் யாரையும் யாரும் கட்டாயப்படுத்த முடியாது; கட்டாயப்படுத்தவும் பா.ஜ.க.வுக்கு தெரியாது. அது எங்களுக்கு தேவையும் இல்லை. இது தான் உண்மை. ஆனால் பா.ஜ.க.வுடன், ஜெயலலிதா பாராட்டி வந்த நட்பு குறித்து அனைவரும் அறிவர்.

ஊழல் குற்றச்சாட்டுகள்

கேள்வி:- ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி முழக்கமிடும் போது, தமிழ்நாட்டில் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் குறிப்பாக அ.தி.மு.க. அமைச்சர்கள், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளதாக எதிர்க்கட்சியினர் புகார் கூறுகின்றனர். இதற்கு தங்களின் பதில் என்ன?

பதில்:- தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சிறிய அளவிலான பங்குதாரர் மட்டுமே. தேர்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக கூட்டணி வைத்து உள்ளோம். ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் முடிவடையாது.

கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்தால், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்குமா? அதன் நிலை என்னவாகும்?

பதில்:- நரேந்திர மோடி மீதே குற்றச்சாட்டு எழுந்தாலும் அவர் முழுமையாக விசாரிக்கப்படுவார். விசாரணையில் இருந்து யாரும் தப்ப முடியாது.

ஜி.எஸ்.டி. வரி

கேள்வி:- ஜி.எஸ்.டி. வரி அமலாக்கப்பட்ட பிறகு, அதிக அளவிலான வரி செலுத்துவதாக, புகார் தெரிவித்து உள்ளனர். இதனால் விலைவாசியும் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனரே?

பதில்:- இதில் உண்மை இல்லை. ஜி.எஸ்.டி வரிக்கு முன்பு சோதனைச்சாவடிகளில் (செக்போஸ்ட்) தலா இரண்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, செலவானது. தற்போது அவை நீக்கப்பட்டதும் அத்தொகை நாட்டு மக்களின் நன்மைக்காக செலவிடப்படுகிறது.

கேள்வி:- அது மட்டுமல்லாமல், ஜி.எஸ்.டி. வரியால், வியாபாரிகள், நிறுவனங்கள் மட்டுமே பயனடைவதாக கூறுகின்றனர். சாமானிய மக்களுக்கு இதனால் பலன் இல்லை என்றும் கூறப்படுகிறதே?

பதில்:- இதில் உண்மை இல்லை. உணவகம் போன்ற இடங்களில் 33 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி வரி 5 சதவீதமாக குறைந்து உள்ளது. சாமான்ய மக்களும் பயன் அடைகின்றனர். இதன் விவரங்களை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

கேள்வி:- மத்திய பா.ஜ.க. அரசின், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால், தொழில்கள் முடக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வது சரிதானா?

பதில்:- கடந்த 1992-ம் ஆண்டு, மன்மோகன் சிங் நிதி மந்திரியாகவும், நரசிம்மராவ் பிரதமராகவும் இருந்த போது நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு, பொருளாதார வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்திய முதல் இடத்தில் உள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டும் வருகிறது.

இம்ரான்கானுக்கு பதில்

கேள்வி:- நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறி உள்ளார். இதை, புகழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறீர்களா? இல்லை சந்தேகத்தோடு பார்க்கிறீர்களா?

பதில்:- இம்ரான்கான் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதை நாம் மறக்கக்கூடாது. பந்து வீசுவதை போல, அவருடைய சமீபத்திய கருத்து இந்தியாவின் தேர்தலில் தலையீடு செய்வதாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு, இம்ரான்கான் வீசிய பந்தை எப்படி சிக்சர் அடிப்பது என்பது அவர்களுக்கு தெரியும். பாகிஸ்தான் தேர்தலின் போது, நவாஸ் ஷெரீப்பை அவர் எவ்வாறு விமர்சித்தார் என்றும் தெரியும். மோடியின் நண்பர் (நவாஸ் ஷெரீப்) ஒரு துரோகி என்றார்.

தமிழகத்துக்கு முழு ஒத்துழைப்பு

கேள்வி:- உங்களுடைய 5 ஆண்டு பணியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்? தேர்தலில் மீண்டும் நீங்கள் வெற்றி பெற்றால் நாட்டுக்கு நீங்கள் செய்யும் பணி என்ன? குறிப்பாக தமிழகத்திற்கு என்ன செய்வீர்கள்?

பதில்:- கடந்த 2014-ம் ஆண்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ளவை நிறைவேற்றப்பட்டு விடும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும், தற்போது தமிழகம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாடு மேலும் வளர்ச்சியடைய நாங்கள், முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

கேள்வி:- ‘பி.எம். நரேந்திர மோடி’ வாழ்க்கை வரலாறு திரைப்படத்துக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து இருப்பது குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில்:- தேர்தல் கமிஷன் என்பது சுதந்திரமான அமைப்பு ஆகும். நான் பிரதமராக தற்போது பதவி வகித்து வரும் பட்சத்தில், இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

ராணுவம்

கேள்வி:- பிரசார கூட்டங்களில் பாலகோட், புல்வாமா தாக்குதல் குறித்து பேசியதற்கு, உங்களிடம் தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு உள்ளதே?

பதில்:- தேர்தல் கமிஷன் சுதந்திரமான அமைப்பு. இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் பிரமுகர்கள் இதன் கட்டுப்பாட்டில் அடங்குவர். பா.ஜ.க.விடம் இது குறித்து விளக்கம் கேட்டால் அதுபற்றி உரிய விளக்கம் அளிக்கப்படும். தேச நலனுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் புகழை பேசக்கூடாது என தேர்தல் கமிஷனின் விதிகளில் உள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது.

கேள்வி:- பிரசார கூட்டங்களில் பிரதமர் ராணுவத்தையும், ராணுவ வீரர்களை பற்றியும் பேசி, அரசியலாக்குவதாக எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றனரே?

பதில்:- ராணுவத்தை பற்றி நான் பிரசாரங்களில் பேசுவதில்லையே. ராணுவ வீரர்களின் வீரத்தை பற்றித்தான் நான் பேசி வருகிறேன். விண்வெளியில் அரசு செய்த சாதனையை சொல்லக்கூடாதா? இதில் என்ன தவறு உள்ளது? பாலகோட் சம்பவம் நிகழாவிட்டால், எதிர்க்கட்சியினர் அதனை பற்றி விமர்சிக்காமல் இருப்பார்களா? அபிநந்தன் திரும்பி வந்திருக்காவிட்டால், எதிர்க்கட்சியினர் என்னை சும்மா விட்டு விடுவார்களா? அவருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருந்தார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Next Story