‘நேருவை அவமதிப்பதற்காக அமைக்கவில்லை’ சர்தார் படேல் சிலையை காங்கிரஸ் தலைவர்கள் பார்வையிடாதது ஏன்? பிரதமர் மோடி கேள்வி
குஜராத்தில் நிறுவப்பட்டு உள்ள, உலகின் உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை காங்கிரஸ் தலைவர்கள் இதுவரை பார்வையிடாதது ஏன்? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.
அம்ரேலி,
இந்த சிலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். எனினும் இதை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் யாரும் இதுவரை பார்வையிடவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
குஜராத்தின் அம்ரேலி தொகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் படேலின் சிலையை இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து சென்றிருக்கின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்களில் ஒருவர் கூட இதுவரை படேல் சிலையை பார்க்க வரவில்லை. படேலை தங்கள் கட்சியை சேர்ந்தவர் என சொந்தம் கொண்டாடிவரும் காங்கிரசார் அவரது சிலையை பார்க்க வராதது ஏன்?
ஜவஹர்லால் நேருவை அவமதிப்பதற்காகவோ, சிறுமைப்படுத்துவதற்காகவோ படேல் சிலையை நிறுவவில்லை. இது (படேல் சிலை), நான் உள்பட லட்சக்கணக்கான இந்தியர்களின் உண்மை மற்றும் மரியாதை சார்ந்த விஷயம். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது, நாட்டை ஒருங்கிணைத்த படேலுக்கு நாம் செலுத்தவேண்டிய நன்றிக்கடன் இது.
நாடு சுதந்திரம் பெற்ற பின் காஷ்மீர் விவகாரத்தை படேலிடம் கொடுக்காமல், நேரு தன்னுடனேயே வைத்துக்கொண்டதால் 70 ஆண்டுகள் கடந்த பிறகும் காஷ்மீர் பிரச்சினை தீர்க்க முடியாமல் இருந்து வருகிறது. உண்மையை சொல்லப்போனால் அரசியல் ஆதாயத்துக்காக காஷ்மீர் பிரச்சினையை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பது காங்கிரசின் கொள்கை ஆகும்.
காஷ்மீர் மாநிலம் முழுவதும் பரவி இருந்த பயங்கரவாதத்தை 2½ மாவட்டங்களுக்குள்ளாக நாங்கள் சுருக்கி விட்டோம். கடந்த 5 ஆண்டுகளில் வேறு எந்த பகுதிகளிலும் குண்டுவெடிப்பு நிகழவில்லை.
கடந்த காலங்களில் புனே, ஆமதாபாத், காஷ்மீர், காசி, ஜம்மு என சீரான இடைவெளிகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வந்தன. ஆனால் தற்போது அனைத்து பகுதிகளிலும் அமைதி நிலவுகிறது. இது நாட்டுக்கான சேவையாக நீங்கள் பார்க்கவில்லையா? தற்போது நீங்கள் பாதுகாப்பாக உணரவில்லையா?
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் முதல் முறையாக கதறியது. மோடி தயவுசெய்து போனை எடுங்கள் என அலறினர். அவர்களை அந்த நிலைக்கு நாம் தள்ளிவிட்டோம்.
டோக்லாமில் 2017-ம் ஆண்டு சீனப்படையினரின் கட்டுமான பணிகளை இந்தியா தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட பதற்றத்தின் போது, நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த மக்கள் என்னிடம், கூடுதல் கவனமாக இருக்குமாறு தெரிவித்தனர். ஆனால் எனது சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்த மக்களோ, எனது மன உறுதியை வலுப்படுத்தினர். இதற்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.
நாடு சுதந்திரம் பெற்ற பின் முதல் முறையாக கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குறைவான தொகுதிகளை காங்கிரஸ் பெற்றது. அதைப்போல முதல் முறையாக இந்த தேர்தலில்தான் அந்த கட்சி குறைவான இடங்களில் போட்டியிடுகிறது. இதுதான் குஜராத்தை சேர்ந்த ஒரு தேநீர் வியாபாரியின் சக்தி ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Related Tags :
Next Story