பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள், வீரர்கள் கொல்லப்படவில்லை: சுஷ்மா சுவராஜ்


பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள், வீரர்கள் கொல்லப்படவில்லை: சுஷ்மா சுவராஜ்
x
தினத்தந்தி 19 April 2019 8:47 AM IST (Updated: 19 April 2019 8:47 AM IST)
t-max-icont-min-icon

பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள், வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

புதுடெல்லி,

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்தியா பிப்ரவரி 26–ந் தேதி வான்தாக்குதல் நடத்தியது. புல்வாமாவில் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாத முகாம்களை அளிக்கும் நோக்கில் இந்தியா, பலாகோட்டில் வான்வழி தாக்குதல் நடத்தியது.   இந்தத் தாக்குதலில் 300 முதல் 400 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், குஜராத்தில் பாஜக மகளிர் அணியினர் இடையே சுஷ்மா சுவராஜ் பேசுகையில், “புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாலகோட்டில் சுய பாதுகாப்புக்காகவே இந்தியா தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து சர்வதேச நாடுகளுக்கும் இந்தியா தெரியப்படுத்தியது.

 பாலகோட் தாக்குதலில் பாகிஸ்தான் குடிமக்கள், அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று விமானப்படையிடம் இந்தியா வலியுறுத்தியதும் உலக நாடுகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது மட்டுமே தாக்குதல் நடத்த வேண்டும் என்று ராணுவத்தையும் இந்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இதன்படி பாகிஸ்தான் குடிமக்கள், வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியபோது, இந்தியாவை உலக நாடுகள் அனைத்தும் ஆதரித்தன. உலக அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு தற்போது அதிகரித்துள்ளது.  மும்பையில் 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 நாடுகளைச் சேர்ந்த 40 பேர் பலியாகினர். இருப்பினும் மும்பைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானை தனிமைப்படுத்த உலக நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வியடைந்து விட்டது” என்றார். 


Next Story