ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு


ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 April 2019 1:43 PM IST (Updated: 19 April 2019 1:43 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டு இருந்த ஹர்திக் படேல் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில், ஹர்திக் படேல் கலந்து கொண்டார். ஹர்திக்படேல் மேடையில் பேசிக்கொண்டு இருந்த போது, மேடையில் ஏறிய மர்ம நபர் ஒருவர் திடீரென ஹர்திக் படேலை கன்னத்தில் அறைந்தார். ஹர்திக் படேலிடம் ஆக்ரோஷமாக ஏதோ பேசவும் செய்தார். 

உடனடியாக மேடைக்கு வந்த காங்கிரஸ் கட்சியினர் அந்த மர்ம நபரை தர்ம அடி கொடுத்து இழுத்துச்சென்றனர். தொடர்ந்து, போலீசிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.  ஹர்திக் படேல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஹர்திக் படேல் ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால், விவசாயி ஒருவரின் நிலத்தில், அந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த நிலத்திற்கு சொந்தமான விவசாயி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஹர்திக் படேல், சாலை மார்க்கமாக கூட்டத்திற்கு சென்றார். இந்த நிகழ்வு நடைபெற்ற மறுநாள் ஹர்திக் படேல் கன்னத்தில் அறை விழுந்துள்ளது. 

படேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடுக்காக குஜராத் மாநிலத்தில் போராட்டங்கள் நடத்திய ஹர்திக் படேல் கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரசாரகராக ஹர்திக் படேல் திகழ்ந்து வருகிறார். 

Next Story