காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்தார்


காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்தார்
x
தினத்தந்தி 19 April 2019 3:06 PM IST (Updated: 19 April 2019 3:06 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதூர்வேதி, பா.ஜனதாவிற்கு பல்வேறு நிலைகளில் பதிலடியை கொடுத்தவர். 2019 தேர்தலில் உ.பி.யில் காங்கிரஸ் கட்சி தனியாக களமிறங்கியுள்ளது.  காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களும் இப்போது உள்ளே வரத்தொடங்கியுள்ளனர், கட்சியும் அவர்களை ஏற்றுக் கொள்கிறது. பிரியங்கா சதூர்வேதியிடம்  கடந்த ஆண்டு மதுராவில் தவறாக நடந்து கொண்டவரும் கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா  சதூர்வேதி கட்சியின் மீதான கோபத்தை டுவிட்டரில் வெளியிட்டார்.

 காங்கிரஸ் கட்சியில் கட்சிக்காக வியர்வையையும், இரத்தத்தையும் கொடுத்தவர்களுக்கு மேலாக குண்டர்களின் குரல் உயரத்தொடங்கியுள்ளது என வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இது காங்கிரசுக்கு தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக பிரியங்கா சதூர்வேதி அறிவித்தார். இதனையடுத்து பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவில் இணைந்துள்ளார். 

காங்கிரசில் இருந்த போது பிரியங்கா சதூர்வேதி, பா.ஜனதாவிற்கு பல்வேறு விவகாரங்களில் சரியான பதிலடியை கொடுத்தவர் ஆவார். பிரியங்கா சதூர்வேதியை சிவசேனா கட்சியும் வரவேற்றுள்ளது.

 “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக நான் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்பது முற்றிலும் தவறானது, அதில் உண்மை கிடையாது,” என பிரியங்கா சதூர்வேதி கூறியுள்ளார். 

பிரியங்கா சதூர்வேதியை வரவேற்றுள்ள சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, “சிவசேனா தொண்டர்களுக்கு நல்ல சகோதரி கிடைத்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story