ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்


ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை கையில் எடுத்தது இன்டர்போல்
x
தினத்தந்தி 25 April 2019 10:20 AM GMT (Updated: 25 April 2019 11:14 AM GMT)

ஜாகீர் நாயக்கிற்கு எதிரான இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் கையில் எடுத்துள்ளது.

மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக். இவர் தனது அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாதத்தில் ஈடுபட தூண்டியதும், பேச்சு மற்றும் போதனைகள் மூலம் வெவ்வேறு மதத்தினர் இடையே பகைமை உணர்வை தூண்ட முயற்சி செய்ததும் தேசிய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து சிறப்பு புலனாய்வு அமைப்பு இவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே இவர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார்.

2016-ம் ஆண்டு வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதிகளை ஊக்குவித்ததில் முக்கிய பங்கு ஜாகிர் நாயக்கிற்கு உள்ளது என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியது. இந்திய அரசிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டது. இந்திய தேசியப் புலனாய்வு பிரிவு விசாரணையை விஸ்தரித்தது.

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டுதல், பயங்கரவாத நடவடிக்கை தடை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. 

இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்கு வெளிநாட்டில் இருந்து வருகிறார். ஜாகீர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இதை ஏற்க மறுத்த இன்டர்போல், எந்த நீதிமன்றத்திலும் ஜாகீர் நாயக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று 2017-ல் நிராகரித்து விட்டது. 

ஜாகீர் நாயக் வெறுக்கத்தக்க பேச்சுகள் மூலம் இளைஞர்களை பயங்கரவாத செயல்களுக்கு தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டில் விசாரிக்க வேண்டியது உள்ளது என இந்திய அரசு, 2018-ல் அவரை நாடு கடத்த மலேசிய அரசுக்கு முறையான கோரிக்கையை முன்வைத்தது. இருப்பினும் சாதகமான பதில் தென்படவில்லை. இப்போது ஜாகீர் நாயக்கிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க இந்தியாவின் கோரிக்கையை சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் கையில் எடுத்துள்ளது. 

2017-ம் ஆண்டு இந்திய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை சுட்டிக்காட்டி, தேசிய புலனாய்வு பிரிவு மீண்டும் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இளைஞர்களை பயங்கரவாத பாதைக்கு செல்லும் வகையில் அவருடைய வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் பிற தொடர்கள் தொடர்பான விரிவான ஆவணங்களை தேசியப் புலனாய்வு பிரிவு இம்முறை அனுப்பியுள்ளது என தெரியவந்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை இன்டர்போலும் கையில் எடுத்துள்ளது என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன். 

இதற்கிடையே எனக்கு ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க இன்டர்போலை இந்திய அரசு நிர்ப்பந்தம் செய்கிறது என ஜாகீர் நாயக் கூறியுள்ளார். 

Next Story