இந்திய பிரதமராக மோடியே நீடிக்க வேண்டும் என்று இம்ரான் கான் ஏன் விரும்புகிறார்: சிதம்பரம் கேள்வி
இந்திய பிரதமராக மோடியே நீடிக்க வேண்டும் என்று இம்ரான் கான் ஏன் விரும்புகிறார் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். #PMModi
புதுடெல்லி,
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கம் ஜெய்ஷ் இ முகம்மது. இந்த அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க மேற்கொண்ட முயற்சிகளை சீனா 4 முறை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தது. 2009, 2016, 2017-ம் ஆண்டுகளிலும் இந்தியா மற்றும் உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அந்த நாடு தடை போட்டு இருந்தது.
சீனாவின் இந்த முட்டுக்கட்டைக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தன. மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு அனைத்து விதமான வழிகளும் ஆராயப்படும் என அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பை விமர்சித்த சீனா, இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தது. இந்த சூழலில், சீனா தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டது. ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு நாங்கள் எங்களது முடிவை மறுபரிசீலனை செய்வதாக சீனா அறிவித்தது.
இவ்வாறு சீனா தனது முட்டுக்கட்டையை விலக்கிக்கொண்டதை தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து உள்ளது. உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் பாதுகாப்பு கவுன்சிலின் தடை கமிட்டி, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவின் ராஜதந்திர நடவவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இவ்விவகாரம் குறித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில், மோடி பிரதமராக நீடிக்க வேண்டும் என்று இம்ரான்கான் விரும்புவது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட் பதிவுகளில் கூறியிருப்பதாவது:- “இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதையடுத்து, 1999 ஆம் ஆண்டில் மசூத் அசாரை பாஜக அரசு விடுதலை செய்தது.
மும்பை தாக்குதலுக்கு மசூத் அசார் சூத்திரதாரியாக செயல்பட்டதையடுத்து, அவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்காக நடைமுறைகள் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் துவங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த முயற்சி 2019-ல் வெற்றி அடைந்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால், மோடி இந்தியாவின் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஏன் விரும்புகிறார்?” இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story