ஒடிசாவில் பானி புயலுக்கு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
ஒடிசாவில் பானி புயலுக்கு பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்து உள்ளது.
புவனேஸ்வர்,
பானி புயல் ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே நேற்று கரையை கடந்தது. இந்த புயலால் நேற்று வரை 8 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் 4 பேரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. பரிபாதாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த சம்பவத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து அவர்கள் மீது விழுந்ததில் உயிரிழந்து உள்ளனர்.
சென்னையில் இருந்து ஹவுரா செல்லும் 220 ரெயில்கள், பயணிகளின் பாதுகாப்பினை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டு உள்ளன. கோடை கால பயிர்கள், பழத்தோட்டங்கள் மற்றும் வாழைத்தோட்டங்கள் ஆகியவை பெரிய அளவில் சேதமடைந்து உள்ளன.
ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் பிற நகரங்களின் பல்வேறு பகுதிகளில் தொலைதொடர்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குடன் பிரதமர் மோடி தொலைபேசி வழியே பேசியுள்ளார். மத்திய அரசின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என அவர் உறுதியளித்து உள்ளார்.
இதேபோன்று நேற்றிரவு நிலைமையை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய பட்நாயக், ஆற்றல் உட்கட்டமைப்பு முற்றிலும் அழிந்து விட்டது. மின்சார இணைப்பினை மீண்டும் கொண்டு வருவது என்பது சவாலான பணியாக உள்ளது என கூறியுள்ளார்.
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தும், உடைந்தும் உள்ளன. விமான நிலையம், ரெயில்வே நிலையம் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றை போன்று மின் வினியோகத்தினை மீண்டும் சீரமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுவரை 25 சதவீதம் அளவிற்கு பணிகள் நடந்து முடிந்துள்ளன.
நாளை (ஞாயிற்று கிழமை) மற்றொரு 25 சதவீத பணிகள் நிறைவடையும் என ஒடிசா ஆற்றல் துறை செயலாளர் ஹேமந்த் சர்மா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story