‘பானி’ புயல் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது: ஒடிசாவில் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின


‘பானி’ புயல் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது: ஒடிசாவில் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின
x
தினத்தந்தி 5 May 2019 3:44 AM IST (Updated: 5 May 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

‘பானி’ புயலால் ஒடிசாவில் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது, மீட்பு, நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


புவனேசுவரம்,

தமிழகத்தை குறிவைத்த ‘பானி’ புயல் பாதை மாறி வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் ஒடிசாவை பந்தாடியது. மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியும், இடைவிடாது பெய்த மழையும் கடலோர மாவட்டங்களை நிலை குலையச்செய்து விட்டன. ஆன்மிக நகரமான பூரியில் தொடங்கி 52 நகரங்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களும் பானி புயலால் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன.

மத்திய அரசும், மாநில அரசும் ஒன்று சேர்ந்து மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்துள்ளது என்பதுதான் ‘பானி’ புயல் சேதத்திலும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

புயல் ஆபத்து பகுதிகளில் இருந்து 24 மணி நேரத்தில் ஏறத்தாழ 12 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இது உயிர்ச்சேதம் குறைவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

இருப்பினும் நேற்று முன் தினம் உயிர்ப்பலி 8 ஆக இருந்தது நேற்று 12 ஆக உயர்ந்தது. பாரிபடா பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் சிக்கி 4 பேர் பலியாகினர்.

முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசினார். புயலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். ஒட்டுமொத்த தேசமும் புயல் பாதித்த மக்களுடன் கரம் கோர்த்து நிற்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் ஒரு பதிவும் வெளியிட்டார்.

‘பானி’ புயலின் ருத்ர தாண்டவத்தில் ஒடிசாவில் உள்ள மின் கட்டமைப்புகள் அனைத்தும் முற்றிலுமாய் அழிந்தன என்றும், மின் வினியோகத்தை மீண்டும் தொடங்குவது என்பது சவாலான பணியாக அமையும் எனவும் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கூறினார்.

நூற்றுக்கணக்கான என்ஜினீயர்களும், பணியாளர்களும் மின் வினியோக சீரமைப்பு பணியில் முழு வீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

துண்டிக்கப்பட்ட சாலைகளை பழுது பார்த்து சரி செய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

மாநில மின்துறை செயலாளர் ஹேமந்த் சர்மா கூறுகையில், “30 லட்சம் வீடுகளில் மின் வினியோகம் இல்லை. அவை இருளில் மூழ்கி உள்ளன. பெரும்பாலும் கடலோர நகரங்கள்தான் அதிகளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. இருப்பினும் மின் வினியோகத்தை மீண்டும் தொடங்க தேவையான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

புவனேசுவரத்தில் மட்டுமே 10 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கம்பங்கள் சாய்ந்து விட்டன. தொலைதொடர்பு கட்டமைப்புகளும் உருக்குலைந்து போய் விட்டதால் அந்த சேவையும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.

பூரி, புவனேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தொலை தொடர்பு சேவை பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மீட்பு, நிவாரண பணிகளில் மேலும் 16 குழுக்களை தேசிய பேரிடர் மீட்பு அதிரடி படை களம் இறக்கி உள்ளது. இதே போன்று கடற்படையும் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் மட்டும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்த இருந்த ‘நீட்’ தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் புயல் பாதித்த பகுதிகளில் தொற்று நோய் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை வல்லுனர்கள் ஒடிசாவுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

புவனேசுவரம் மற்றும் கொல்கத்தா நகரங்களில் விமான சேவை மீண்டும் தொடங்கி உள்ளது.

‘பானி’ புயல் ஒடிசாவை பதம் பார்த்து விட்டு, வங்காளதேசத்தை நோக்கி நகர்ந்தது. அங்கும் ‘பானி’ புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இடைவிடாத மழையும் பெய்தது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 53 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்த பயிர்கள் சேதம் அடைந்தன.

13 ஆயிரம் வீடுகள் பாதிப்புக்குள்ளாகின. 14 பேர் பலியானதாக தெரிய வந்துள்ளது. மீட்பு, நிவாரண பணிகளில் வங்காளதேச அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளது.


Next Story