இலங்கை நீர்கொழும்பு பகுதியில் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்வு


இலங்கை நீர்கொழும்பு பகுதியில் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்வு
x
தினத்தந்தி 6 May 2019 11:49 AM IST (Updated: 6 May 2019 11:49 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை நீர்கொழும்பு பகுதியில் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து கடந்த மாதம் 21-ந் தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. உலக நாடுகளை உலுக்கிய இந்த தற்கொலை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 500 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலையை பிறப்பித்துள்ள இலங்கை அரசு, ராணுவத்துக்கும், போலீசாருக்கும் அதிக அதிகாரம் கொடுத்து குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை வேட்டையாட பணித்து உள்ளது. அதன்படி இந்த தாக்குதல் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தொடர் வெடிகுண்டு தாக்குதல்களால், பீதியில் உறைந்து போய் இருந்த இலங்கை, தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் மேற்கு கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் நேற்று இரு தரப்பினர் மத்தியில் மோதல் வெடித்தது.  போரதொடா பகுதியில், ஒரு குழுவினர் மூன்று சக்கர வாகனத்தில்  சென்றவர்களை கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கினர். தொடர்ந்து வாகனமும் தீ வைக்கப்பட்டது. இந்த மோதலில், சிலர் காயம் அடைந்தனர். இந்த பகுதியில் உள்ள தேவாலயத்தில்தான் ஈஸ்டர் தினத்தன்று வெடிகுண்டு  தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இதனால், இந்த வன்முறை சம்பவம் மீண்டும் பதற்றத்தை அதிகப்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக நேற்று இரவு முதல் காலை 7 மணி வரை  அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வதந்திகள் பரவாமல் தடுப்பதற்காக பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டன. தற்போது, பதற்றம் தணிந்து அமைதி திரும்பியதையடுத்து, நீர்கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படவில்லை. சமூக வலைதளங்கள் முடக்கமும் ரத்து செய்யப்பட்டது. நீர்கொழும்பு பகுதியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த மோதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story