பாகிஸ்தானில் தர்கா அருகே தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் தர்கா அருகே தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் லாகூரில் சூபி முஸ்லிம்களின் வழிபாட்டு தலமான தர்காவில், ரம்ஜான் நோன்பு தொடங்கி இருப்பதையொட்டி ஏராளமான முஸ்லிம்கள் இங்கு வர தொடங்கி இருக்கிறார்கள். அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தெற்கு ஆசியாவில் உள்ள மிக பழமையான மற்றும் மிகப்பெரிய தர்காவாக விளங்கும் இந்த தர்காவில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதலை நடத்தியுள்ளான்.
குண்டு வெடிப்பில் சிக்கி 5 போலீசாரும், அப்பாவி மக்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் போலீசார் உள்பட 25–க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து, கூடுதல் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காயம் அடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற ஹிஸ்புல் அரார் பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் இம்ரான் கான், குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story