டெல்லியில் ஓட்டுப்போட வரும் 100 வயதை கடந்த வாக்காளர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள்


டெல்லியில் ஓட்டுப்போட வரும் 100 வயதை கடந்த வாக்காளர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 9 May 2019 1:00 AM IST (Updated: 9 May 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஓட்டுப்போட வரும் 100 வயதை கடந்த வாக்காளர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங், மூத்த வாக்காளர்களை ஊக்குவிக்க பல்வேறு வசதிகளை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

டெல்லியில் 100 மற்றும் அதற்கு மேல் வயதை கொண்ட வாக்காளர்களை அடையாளம் காண்பதற்காக கடந்த 4 மாதங்களாக நாங்கள் தீவிர ஆய்வில் ஈடுபட்டோம். அதன் பயனாக 100 வயதை கடந்த 96 வாக்காளர்கள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதில் 54 பேர் பெண்கள் ஆவர்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு பிறந்தது மட்டுமின்றி 1952-ல் நடந்த முதல் தேர்தலையும் கண்ட இவர்களை இந்த தேர்தலில் வாக்களிக்க வைப்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளோம். எங்களை பொறுத்தவரை, அவர்கள் 96 பேரும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் ஆவர். அவர்களை நாங்கள் அப்படித்தான் நடத்த உள்ளோம்.

அதன்படி தேர்தல் நாளன்று ஒவ்வொரு மூத்த வாக்காளரின் வீட்டுக்கும் ஒரு மூத்த அதிகாரி சென்று, அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவார். இந்த 96 பேரில் படுக்கையோ அல்லது முதுமை காரணமாக நடமாட முடியாத நிலையிலோ இல்லாதவர்களை ஓட்டு போடுமாறு அவர்கள் ஊக்கப்படுத்துவார்கள்.

அப்படி தங்கள் முதுமை மற்றும் உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் வாக்களிக்க ஆர்வமாக இருக்கும் வாக்காளரை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் மேற்கொள்ளும். அவர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்களிக்க வசதிகள் செய்யப்படும்.

மேலும் வாக்குச்சாவடிக்கு அவர்கள் வரும்போது, பூங்கொத்து வழங்கி வரவேற்கப்படுவார்கள். தேர்தல் பணியாளர்கள் அனைவரும் அந்த முதிய வாக்காளருடன் சேர்ந்து ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். இவ்வாறு 100 வயதை கடந்த இந்த வாக்காளர்கள் அனைவரும் மிக மிக முக்கிய நபராக நடத்தப்படுவார்கள். இவ்வாறு ரன்பீர் சிங் கூறினார்.


Next Story