ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே பதவி விலகியுள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் இந்தியாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கும் தனது சேவையை நடத்தி வந்தது. இந்த நிறுவனத்தில் 22 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். தினமும் 650 விமான சேவைகளை இயக்கிக்கொண்டிருந்த இந்த நிறுவனம், கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டத்தில் மூழ்கியது. இதனால் விமான எண்ணிக்கைகளை குறைத்துக்கொண்டே வந்தது. கடைசியாக கடந்த ஏப்ரல் 16ந்தேதி 5 விமானங்கள்தான் பறந்தன.
கடந்த 2018 டிசம்பர் மாத கணக்குப்படி, இந்த விமான நிறுவனத்தின் நஷ்டம் ரூ.7 ஆயிரத்து 654 கோடியாக இருந்தது. இதனை சரிகட்ட ஊழியர்களெல்லாம் 25 சதவீத சம்பள குறைப்பை தாங்கிக்கொள்ளவேண்டும் என்று நிறுவனம் கூறியது. விமானிகளுக்கும், பராமரிப்பு பொறியாளர்கள், மூத்த நிர்வாகிகளுக்கும் ஜனவரி மாதம்முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. மற்ற ஊழியர்களுக்கு மார்ச் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த வினய் துபே இன்று பதவி விலகினார். தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த பதவியில் இருந்து விலகுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த அமித் அகர்வால் நேற்று தனது பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், மற்றொரு உயரதிகாரி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உயர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
Related Tags :
Next Story