வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் - பிரதமர் மோடி
கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் இடையே கடும் வன்முறை நேரிட்டது. அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. சிலையை உடைத்தது பா.ஜனதாவினர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. பா.ஜனதா திரிணாமுல் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது.
பா.ஜனதா குண்டர்கள்தான் சிலையை உடைத்தது என திரிணாமுல் காங்கிரஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது.
மம்தா பானர்ஜி பேசுகையில், அமித்ஷா தனது கூட்டத்தின் மூலம் வன்முறைகளை உருவாக்கியுள்ளார். வித்யாசாகர் சிலை சிதைக்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி வருத்தப்படவில்லை. மேற்கு வங்காள மக்கள் இதனை தீவிரமாக எடுத்துள்ளனர். அமித்ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். இந்நிலையில் கொல்கத்தாவில் வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கொல்கத்தாவில் அமித்ஷாவின் பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்களின் செயலை மீண்டும் பார்த்துள்ளோம். அவர்கள் வித்யாசாகர் சிலையை சிதைத்துள்ளனர். நாங்கள் வித்யாசாகரின் கொள்கையில் உடன்பாடு கொண்டவர்கள், அவருடைய சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் எனக் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story