நாடாளுமன்ற தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு


நாடாளுமன்ற தேர்தலில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 May 2019 5:00 AM IST (Updated: 19 May 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்ற தேர்தல், ஒட்டு மொத்த உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி மே 19-ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. 6 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. அவற்றில் 66.88 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இந்தநிலையில், 7-வது இறுதிக்கட்ட தேர்தல் 59 தொகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

காலை 7 மணிக்கு தொடங்குகிற வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது.

பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகாரில் 1 என 59 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த 59 தொகுதிகளில் 40 தொகுதிகளை பாரதீய ஜனதா கூட்டணி கைப்பற்றி இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் 9, ஆம் ஆத்மி 4, காங்கிரஸ் 3, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 2, ஐக்கிய ஜனதாதளம் 1 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தன. பெரும்பான்மை தொகுதிகளை பாரதீய ஜனதா கட்சி கூட்டணி கைப்பற்றி உள்ளதால், இன்றைய தேர்தல் அந்தக் கூட்டணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

இன்று தேர்தலை சந்திக்கிற தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதன்மையானவர். அவர் உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த முறை போட்டியிட்ட அஜய் ராய் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.

மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத், மனோஜ் சின்கா, ஹர்சிம்ரத் கவுர் பாதல், ராம்கிருபால் யாதவ், ஆர்.கே.சிங் உள்ளிட்டவர்கள் முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.

சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர்சிங் பாதல், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித்தலைவர் சிபு சோரன் ஆகியோரும் இன்று தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் அடங்குவர்.

இந்த தேர்தலில் மொத்தம் 918 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை சுமார் 10 கோடியே 1 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டு முடிவு செய்கிறார்கள். இவர்களுக்காக 1 லட்சத்து 12 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலுடன் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தல்களுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல்கள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. மாலை 6 மணிக்கு பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின்றன.

ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடைபெறும். மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது அன்று மாலை தெரிய வரலாம்.


Next Story