அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி டெல்லியில் இன்று ஆலோசனை : கூட்டணி தலைவர்களுக்கு அமித்ஷா விருந்து


அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி டெல்லியில் இன்று ஆலோசனை : கூட்டணி தலைவர்களுக்கு அமித்ஷா விருந்து
x
தினத்தந்தி 21 May 2019 5:45 AM IST (Updated: 21 May 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

பாரதீய ஜனதா கூட்டணி தலைவர்களுக்கு அமித்ஷா டெல்லியில் இன்று விருந்து அளிக்கிறார். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த விருந்து நிகழ்ச்சியின்போது ஆலோசிக்கப்படுகிறது.

புதுடெல்லி, 

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? என்பதுதான் இப்போது எல்லோர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி.

இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. மற்ற கட்சிகளை பொறுத்தமட்டில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற சில கட்சிகள் கூட்டணி அமைத்தும், பல கட்சிகள் தனித்தனியாகவும் களம் கண்டன.

மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். வருகிற 23-ந் தேதி (வியாழக் கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போதுதான் ஆட்சி அமைப்பது யார்? என்பது தெரியவரும்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாயின. அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறப்பட்டு உள்ளது. இதனால், பாரதீய ஜனதா கூட்டணி தலைவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை விருந்து அளிக்கிறார். டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார், மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். இவர்கள் தவிர மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

தேர்தல் முடிவு வெளியாக இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விருந்து நிகழ்ச்சியின் போது, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்த விருந்து நிகழ்ச்சிக்கு முன்பாக, பாரதீய ஜனதா மேலிட தலைவர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதில், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.


Next Story