கூட்டணிக்காக கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம் : அன்புமணி ராமதாஸ் பேட்டி


கூட்டணிக்காக கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம் : அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 22 May 2019 3:08 AM IST (Updated: 22 May 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணிக்காக கொள்கையை விட்டு கொடுக்க மாட்டோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்லும் முன் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும். பிரதமராக மீண்டும் மோடி பதவி ஏற்பார் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. கடந்த 2 மாதங்களாக நாங்கள் இதைத்தான் சொல்லி வருகிறோம்.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியும், மத்தியில் மோடி ஆட்சியும் தொடரும். நிலத்தடி நீர் குறைந்து வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கால நிலை மாற்றம் தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தந்து மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்க வேண்டும். கூடுதல் திட்டங்களை கொண்டு வர வேண்டும்.

இதற்கு முக்கிய திட்டமாக கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம். இது தமிழகத்திற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் கொண்டு வரும் திட்டம். இந்த திட்டம் கொண்டுவந்தால் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். கோதாவரி-காவிரி திட்டம் வந்தால் 25 மாவட்டங்கள் பயன்பெறும்.

கூட்டணி சார்பில் ஒட்டுமொத்தமாக அழுத்தம் தந்து திட்டத்தை நிறைவேற்றுவோம். கூட்டணி தான் சேர்ந்து உள்ளோம். பா.ம.க. கொள்கைகளை விட்டு கொடுக்கப்போவதில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டம் வராமல் பார்த்துக்கொள்வோம். டெல்டா மாவட்டம் மக்களுக்கு உணவு அளிக்கக்கூடிய மண். கடுமையாக எதிர்க்கும் திட்டங்களை எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story