ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் உணர்ச்சிகர சம்பவம்; தாயின் கண்ணீரை துடைத்த மகன்

ஆந்திர பிரதேச முதல் மந்திரியாக பதவியேற்ற விழாவில் தாயின் கண்ணீரை ஜெகன் மோகன் ரெட்டி துடைத்த உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
விஜயவாடா,
ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேச முதல் மந்திரியாக அவர் இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார். அவருக்கு ஆளுனர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்பின் நடந்த மதிய விருந்தில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற விழாவில் உணர்ச்சிகர சம்பவம் நடந்தது. பதவியேற்ற பின் முதன்முறையாக உரையாற்றிய ஜெகன், ஆந்திர பிரதேச அரசு நிர்வாகத்தில் இருந்து ஊழலை வேருடன் ஒழிப்பேன் என உறுதி கூறினார். இந்த நிகழ்ச்சிகளை ஜெகனின் தாயார் ஒய்.எஸ். விஜயம்மா தீவிரமுடன் கவனித்தார். இதன்பின் அவரை நோக்கி நடந்து சென்ற ஜெகன் தாயாரின் ஆசியை பெற்றார்.
இதன்பின் தனது மகனை கட்டிப்பிடித்து அவரது தாயார் அழுது விட்டார். அவரது கண்ணீரை துடைத்து விட்டு ஜெகன் ஆறுதல் கூறினார். கடந்த 2009ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி உயிரிழந்து விட்டார். இதன்பின் பல சோதனைகளை கடந்த ஜெகன் இன்று முதல் மந்திரியாக பதவியேற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஜெகன் கைக்கெடிகாரம் ஒன்றை அணிந்து வந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
இது அவரது தந்தை ராஜசேகர ரெட்டி அணிந்த ஒன்று என சில கட்சி தொண்டர்கள் கூறினர். ஆனால், ராஜசேகர ரெட்டி போன்று கைக்கெடிகாரம் அணியும் வழக்கம் ஜெகனுக்கு இல்லை என கூறிய கட்சி தலைவர் ஒருவர், ஜெகனின் 5 ஆண்டு ஆட்சி அவரது தந்தையின் பொற்கால ஆட்சி நீட்டிப்பின் அடையாளம் ஆக இருக்கும் என்று கூறினார். சிலர் இது ஒய்.எஸ்.ஆரின் பரிசு என்றும் சிலர் இது ஒய்.எஸ்.ஆர் அணிந்த கைக்கெடிகாரம் என்றும் கூறினர்.
எனினும், அக்கட்சியின் எம்.பி. ஒருவர் இதற்கு எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு பின் முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் இந்து மத சாமியார்களிடம் ஜெகன் ஆசி பெற்று கொண்டார்.
Related Tags :
Next Story