ராகுல் காந்தியுடன் குமாரசாமி சந்திப்பு கர்நாடக கூட்டணி அரசு சுமுகமாக நடைபெறும் என அறிவிப்பு


ராகுல் காந்தியுடன் குமாரசாமி சந்திப்பு கர்நாடக கூட்டணி அரசு சுமுகமாக நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 30 May 2019 9:55 PM GMT (Updated: 30 May 2019 9:55 PM GMT)

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். கர்நாடக கூட்டணி அரசு சுமுகமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தில் ஜனதா தளம் (எஸ்), காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. மாநில அரசுக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் மாநில அரசு தொடர்ந்து நெருக்கடியில் இருந்து வருகிறது.

சமீபத்தில் அதிருப்தியில் உள்ள 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிஹோலி, சுதாகர் ஆகியோர் பா.ஜனதா தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் இது அரசியல்ரீதியான சந்திப்பு அல்ல என்று தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமி நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது சோனியா காந்தியும் அங்கு இருந்தார். அப்போது குமாரசாமி கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கினார்.

இந்த சந்திப்பு குறித்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், “கர்நாடக முதல்-மந்திரி மாநில அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல் காந்தியிடம் விளக்கினார். இரு கட்சிகளின் ஒத்துழைப்புடனும், நல்லுறவுடனும் மாநில அரசு சுமுகமாக நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்றும், அவரது சேவை நாட்டுக்கு தேவை என்றும் குமாரசாமி வலியுறுத்தினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story