உள்துறை அமைச்சக இணை செயலாளர்களுடன் மத்திய மந்திரி அமித் ஷா இன்று சந்திப்பு


உள்துறை அமைச்சக இணை செயலாளர்களுடன் மத்திய மந்திரி அமித் ஷா இன்று சந்திப்பு
x
தினத்தந்தி 1 Jun 2019 3:29 PM IST (Updated: 1 Jun 2019 3:29 PM IST)
t-max-icont-min-icon

உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர்களை மத்திய மந்திரி அமித் ஷா இன்று சந்திக்கிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது.  இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற குழு தலைவர் மற்றும் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி 2வது முறையாக பிரதமராக நேற்று முன்தினம் முறைப்படி பதவி ஏற்று கொண்டார்.

அவருடன் 24 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 9 பேர் தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளாகவும், 24 பேர் ராஜாங்க மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். மோடிக்கும், மந்திரிகளுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மந்திரிசபையில் இடம்பெற்றவர்களுக்கு நேற்று இலாகா ஒதுக்கப்பட்டது. இதன்படி, உள்துறை அமைச்சர் பொறுப்பு அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டது.  இதனை அடுத்து பொறுப்பேற்பதற்காக இன்று உள்துறை அமைச்சக அலுவலகம் வந்த அமித்ஷாவை மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா வரவேற்றார்.  பின்னர் முறைப்படி அமித்ஷா பொறுப்பேற்று கொண்டார்.  தொடர்ந்து தனது அலுவலக பணிகளை அவர் மேற்கொண்டார்.

இந்த நிலையில், மத்திய மந்திரி அமித் ஷா, தனது அமைச்சகத்தின் இணை செயலாளர்களை இன்று சந்திக்கிறார்.

Next Story