முடி வளர சிகிச்சை எடுத்து 3 வருடம் சஸ்பெண்டான விமானி நீதிமன்றத்தில் மேல்முறையீடு


முடி வளர சிகிச்சை எடுத்து 3 வருடம் சஸ்பெண்டான விமானி நீதிமன்றத்தில் மேல்முறையீடு
x
தினத்தந்தி 3 Jun 2019 6:51 PM IST (Updated: 3 Jun 2019 6:51 PM IST)
t-max-icont-min-icon

முடி வளர சிகிச்சை எடுத்து 3 வருடம் சஸ்பெண்டு ஆனதற்கு எதிராக விமானி ஒருவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

புதுடெல்லி,

ஏர் இந்தியா விமான நிறுவன விமானி ஒருவர் தனது தலைமுடி வளருவதற்காக சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்.  இதன்பின் விமானம் ஓட்டுவதற்கு முன் அவரிடம் நடந்த சுவாச ஆய்வு பரிசோதனையில் ஆல்கஹால் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரை விமான போக்குவரத்து ஜெனரல் இயக்ககம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.  கடந்த வருடம் நடந்த இந்த சம்பவத்தில், சஸ்பெண்டு உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விமானி மேல்முறையீடு செய்துள்ளார்.

அதில், சுவாச ஆய்வு பரிசோதனையில் 0.16 மற்றும் 0.20 என்ற அளவிலேயே ஆல்கஹால் இருந்தது.  சர்வதேச அனுமதி அளவான 0.40 என்ற அளவை விட இது குறைவாகும் என தெரிவித்து உள்ளார்.  இந்த பரிசோதனை நடந்த அதே நாளில் தனியார் ஆய்வகத்தில் மேற்கொண்ட ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனையில், ஆல்கஹால் எதுவும் இல்லை என்றே முடிவு வந்தது என்றும் தெரிவித்து உள்ளார்.

எனினும், விமான போக்குவரத்து ஜெனரல் இயக்ககம், அனுமதிக்கப்பட்ட ஆல்கஹால் அளவு 0.0 என்று நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.  கடந்த காலத்தில் விமானியிடம் நடந்த பரிசோதனை ஒன்றில் ஆல்கஹால் இருந்தது தெரிய வந்தது.  ஆனால், இருமல் மருந்து குடித்ததில் ஆல்கஹால் இருந்துள்ளது என விமானி கூறினார் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த பரிசோதனையில் குறைந்த அளவு ஆல்கஹாலே இருந்துள்ளது என கவனத்தில் கொண்ட நீதிமன்றம், விமானி குடித்திருக்க வேண்டிய தேவை இல்லை என தெரிவித்து, விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து ஜெனரல் இயக்ககம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Next Story