கேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு: பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது


கேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு: பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது
x
தினத்தந்தி 4 Jun 2019 10:28 AM IST (Updated: 4 Jun 2019 10:28 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் ‘நிபா‘ வைரஸ் காய்ச்சல் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. 

பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும். வவ்வாலின் கழிவுகளில் இருந்துதான் நிபா வைரஸ் பரவுகிறது என தெரிவிக்கப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கையால் வைரஸ் காய்ச்சல் கடந்த ஆண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில்,  கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அவருக்கு அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாயின. இதை கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா உறுதிப்படுத்தியுள்ளார். 

இளைஞரின் ரத்த மாதிரிகள் புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகளின் படி, 23-வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அந்த இளைஞருக்கு தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் 86 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story