குஜராத் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை துண்டித்த நர்ஸ்
குஜராத் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை நர்ஸ் துண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத குழந்தை ஒன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு மருந்து ஏற்றுவதற்காக குழந்தையின் கையில் கட்டு போடப்பட்டது. பின்னர் அதை நர்ஸ் ஒருவர் பிரித்தார்.
அப்போது குழந்தையின் கட்டை விரலை அவர் தவறுதலாக துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் விரலை மீண்டும் சேர்த்து விட்டது. எனினும் அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெறுமா? என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என டாக்டர்கள் அறிவித்து விட்டனர். எனவே அந்த குழந்தையை வேறு நவீன மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய், போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக அந்த நர்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஆமதாபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story