வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
மும்பை,
நாட்டின் பொருளாதாரத்தினை மந்த நிலையில் இருந்து புதுப்பிக்கவும் மற்றும் வருவாய்க்கான வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சியாக, கடந்த 5 மாதங்களில் தொடர்ச்சியாக 3வது முறையாக வட்டி விகிதத்தினை குறைக்கும் நடவடிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கி ஈடுபட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக மும்பையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதி கொள்கை ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. 6 உறுப்பினர்களை கொண்ட இந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தினை (ரெப்போ ரேட்) குறைப்பது என்ற முடிவுக்கு ஆதரவாக அனைவரும் ஒப்புதல் அளித்தனர்.
இதன்படி 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 5.75 சதவீதம் அளவிற்கு இந்த வட்டி விகிதம் இருக்கும். இதனால் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் உடனடியாக அதிக வளர்ச்சி காணப்படும். கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பருக்கு பின் முதன்முறையாக 6 சதவீதத்திற்கும் குறைவாக இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று நடப்பு நிதியாண்டு 2020க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, முடிவடைந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த 7.2 சதவீதம் என்ற அளவில் இருந்து 7 சதவீதம் ஆக திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது. இது முதல் அரையாண்டில் 6.4 முதல் 6.7 சதவீதம் என்ற அளவிலும், இரண்டாவது அரையாண்டில் 7.2 முதல் 7.5 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும்.
இந்த கூட்டத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் ஆனது முதல் அரையாண்டில் 3.0 முதல் 3.1 சதவீதம் என்ற அளவிலும், இரண்டாவது அரையாண்டில் 3.4 முதல் 3.7 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் வகையில் திருத்தியமைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story