பீகாரில் மரியாதை தராத கடை ஊழியரை அடித்து தாக்கிய பா.ஜ.க. தேசிய துணை தலைவரின் சகோதரர்


பீகாரில் மரியாதை தராத கடை ஊழியரை அடித்து தாக்கிய பா.ஜ.க. தேசிய துணை தலைவரின் சகோதரர்
x
தினத்தந்தி 7 Jun 2019 7:29 AM IST (Updated: 7 Jun 2019 7:29 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் மரியாதை தராத மருந்து கடை ஊழியரை பா.ஜ.க. தேசிய துணை தலைவரின் சகோதரர் அடித்து தாக்கியுள்ளார்.

பெட்டையா,

பீகாரில் பெட்டையா நகரில் மருந்து கடை ஒன்றில் புகுந்த நபர் ஒருவர் அங்கிருந்த ஊழியரை அடித்து தாக்கியுள்ளார்.  இதுபற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.  அவர், பா.ஜ.க. தேசிய துணை தலைவர் மற்றும் முன்னாள் பீகார் மந்திரியான ரேணு தேவியின் சகோதரர் பினு ஆவார்.

அந்த வீடியோவில், கடந்த 3ந்தேதி பினு மருந்து கடை ஒன்றிற்கு சில பொருட்களை வாங்க சென்றுள்ளார்.  அங்கு கடையில் இருந்த மருந்து கடை ஊழியரிடம் எழுந்து நின்று மரியாதை செலுத்தும்படி கூறியுள்ளார்.  ஆனால் இதற்கு ஊழியர் மறுத்து விட்டார்.

இதனால் ஆவேசமடைந்த பினு மருந்து கடை ஊழியரை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்.  பின்னர் அவரது சட்டை காலரை பிடித்து தர தரவென இழுத்து வெளியே சென்றார்.  இதன்பின்பு தனது காரில் ஊழியரை ஏற்றி கொண்டு, கடத்தி சென்றுள்ளார்.

எனினும், இந்த விவகாரத்தில் பினுவின் சகோதரி ரேணு தேவி கூறும்பொழுது, தவறான செயல்களுக்கு ஒருபொழுதும் நான் ஊக்கமளித்தது கிடையாது.  பல வருடங்களாக பினுவுடன் எனக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.  நாங்கள் பேசி கொள்வது கூட இல்லை.

இருந்தும் என்னை இந்த விவகாரத்தில் தொடர்புபடுத்தி உள்ளனர்.  நான் உள்பட, யாரேனும் தவறு செய்து இருப்பின் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என உறுதியுடன் கூறினார்.

இதுபற்றி பெட்டையா போலீஸ் சூப்பிரெண்டு ஜெயந்த் காந்த் கூறும்பொழுது, பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளோம்.  கடத்தலுக்கு பயன்பட்ட 4 சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  இதுபற்றி வழக்கு பதிவு செய்துள்ளோம்.  ஊழியரை கடத்தி எங்கு சென்றுள்ளனர் என விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

Next Story