உத்தர பிரதேசத்தில் புழுதிபுயல் மற்றும் மின்னலுக்கு 13 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் புழுதிபுயல் மற்றும் மின்னலுக்கு 13 பேர் உயிரிழந்து உள்ளனர்.
லக்னோ,
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்களில் கடுமையான அனல் காற்று வீசும் நிலை ஏற்பட்டு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதேபோன்று அரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் புழுதி புயலுடன் மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் நேற்று எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் புழுதி புயல் மற்றும் மின்னலுக்கு 13 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி மாநில நிவாரண ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், மெயின்புரி நகரில் 6 பேரும், இடா மற்றும் காஸ்கஞ்ச் ஆகிய பகுதிகளில் தலா 3 பேரும் மற்றும் மொராதாபாத் நகரில் ஒருவரும் என 13 பேர் புழுதிபுயலால் பலியாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்த புழுதிபுயலால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் மெயின்புரி நகரில் 20 பேர் மற்றும் படான் நகரில் ஒருவர் என 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த புழுதிபுயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story