சியாச்சினில் முட்டைகளை உடைக்க சுத்தியலை பயன்படுத்தும் ராணுவ வீரர்கள்; வைரலாகும் வீடியோ


சியாச்சினில் முட்டைகளை உடைக்க சுத்தியலை பயன்படுத்தும் ராணுவ வீரர்கள்; வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 9 Jun 2019 7:51 AM GMT (Updated: 9 Jun 2019 1:06 PM GMT)

சியாச்சின் பனிமலையில் நிலவும் கடும் குளிரால் முட்டைகளை உடைக்க ராணுவ வீரர்கள் சுத்தியலை பயன்படுத்திய வீடியோ வைரலாகிறது.

புதுடெல்லி,

உலகின் மிக குளிர்ச்சியான போர்க்கள பகுதி சியாச்சின் பனிமலை.  இந்தியாவின் வடக்கே 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இங்கு வழக்கத்தினை விட அதிக குளிர் நிலவும்.  ராணுவ வீரர்கள் இதனை பொருட்படுத்திடாமல் பல சங்கடங்களுக்கு இடையே நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவுகளும் அடிக்கடி நடைபெறுவது வழக்கம்.  எதிரிகளுடனான போரை விட கடுங்குளிர் மற்றும் குளிர் காற்று ஆகியவற்றுடன் அவர்கள் போராட வேண்டியுள்ளது.

ஒவ்வொரு நிமிடமும் சியாச்சினில் சந்தித்து வரும் சவாலான சூழ்நிலையை விளக்குவதற்காக 3 வீரர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.  அதில், வீரர் ஒருவர் ஜூஸ் உள்ள கவரை பிரிக்கிறார்.  உள்ளே செங்கல் வடிவில் ஜுசானது உறைந்து போயுள்ளது.  அதனை மேஜையின் ஓரம் வைத்து விடுகிறார்.  மற்ற வீரர் சுத்தியலால் அடித்து உடைக்க முற்படுகிறார்.  ஆனால் அது உடையவில்லை.

இதன்பின் கல் போன்று கடினத்தன்மையை அடைந்த உறைந்த முட்டைகளை உடைக்க வீரர்கள் முயல்கின்றனர்.  சுத்தியலை பயன்படுத்தியும் அது தோல்வி அடைகிறது.  ஒரு வீரர் முட்டையை எடுத்து ஓங்கி அடிக்கிறார்.  ஒன்றும் நடக்கவில்லை.

கடுங்குளிரில் உறைந்துபோன வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் உருளை கிழங்கு ஆகியவற்றையும் இதேபோன்று உடைக்க முயற்சித்து அது முடியாமல் போகிறது.  இதுபற்றி வீரர் ஒருவர், சியாச்சினில் வெப்பநிலை மைனஸ் 70 டிகிரிக்கும் கீழே உள்ளது.  வாழ்க்கை நரகம் போன்று இங்கு இருக்கும் என கூறுகிறார்.  அவருக்கு பின்னால் வீரர்கள் தங்கியிருக்கும் வெண்பனி போர்த்திய கூடாரம் பளிச்சிடுகிறது.

இந்த வீடியோ டுவிட்டரில் பரவி வைரலாகிறது.  பலரும் நாட்டுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களை புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.



Next Story