கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது: பா.ஜனதாவுடன் விரிசல் இல்லை - நிதிஷ் குமார் சொல்கிறார்


கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது: பா.ஜனதாவுடன் விரிசல் இல்லை - நிதிஷ் குமார் சொல்கிறார்
x
தினத்தந்தி 11 Jun 2019 4:15 AM IST (Updated: 11 Jun 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது என்றும், பா.ஜனதாவுடன் விரிசல் இல்லை என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பாட்னா,

மத்திய மந்திரிசபையில் ஐக்கிய ஜனதாதளம் சேர மறுத்து விட்டதால், பா.ஜனதாவுக்கும், அக்கட்சிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் அதை மறுத்துள்ளார்.

அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய மந்திரிசபையில் அடையாள பிரதிநிதித்துவமாக ஒரே ஒரு பதவி அளிக்க முன்வந்ததால், நாங்கள் அதை நிராகரித்து விட்டோம். அப்பிரச்சினை அத்துடன் முடிந்து விட்டது. அதில் தேவையற்ற குழப்பம் உருவாக்க பார்க்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. இந்த விஷயத்தில் பா.ஜனதாவுடன் விரிசல் இல்லை.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கினால், அதை எதிர்ப்போம். சம்பந்தப்பட்ட மதத்தினரின் சம்மதத்தை பெறாமல் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story