யோகி ஆதித்யநாத்திற்கு எதிரான அவதூறு கருத்து; கொலை குற்றமா என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி


யோகி ஆதித்யநாத்திற்கு எதிரான அவதூறு கருத்து; கொலை குற்றமா என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 11 Jun 2019 2:52 PM IST (Updated: 11 Jun 2019 2:52 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியாவை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைத்ததற்கு சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியாவை உ.பி. போலீஸ் கைது செய்தது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  இச்சம்பவத்திற்கு எதிராக பத்திரிக்கையாளரின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில்  மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, உ.பி. அரசு மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது.

எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள்? கைது  நடவடிக்கையை சரியானதாக கருதுகிறீர்களா? கொலைக்குற்றம்  செய்துவிட்டாரா? அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? லக்னோ மாஜிஸ்திரேட் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு தனிநபருக்கும் தன்னுடைய கருத்தை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமையுள்ளது. சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட  வேண்டியவைதான். அதற்காக கைது செய்வீர்களா? எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை எடுப்பீர்களா? என சரமாரியான கேள்விகளை எழுப்பியது.

ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு என்பது எப்படி சரியாகும்? எனவும் கடுமையான கண்டனத்தை சுப்ரீம் கோர்ட்டு வெளிப்படுத்தியது.

பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியாவிற்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஜாமீன் வழங்கியதால் பிரசாந்த் கனோஜியாவின் சமூக வலைதள கருத்தை ஏற்றுக்கொள்கிறோம் என பொருள் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Next Story