பாகிஸ்தான் வழியாக பிரதமர் மோடி விமானம் பறக்காது


பாகிஸ்தான் வழியாக பிரதமர் மோடி விமானம் பறக்காது
x
தினத்தந்தி 12 Jun 2019 3:28 PM IST (Updated: 12 Jun 2019 3:28 PM IST)
t-max-icont-min-icon

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்காது.

கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நாளை (13–ந்தேதி) தொடங்கி நாளை மறுதினம் (14–ந்தேதி) முடிகிறது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவர் இந்த மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் செல்கிறார். ஆனால் அவரை பிரதமர் மோடி சந்திக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரி 14–ந்தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தருகிற வகையில், இந்திய போர் விமானங்கள் பிப்ரவரி 26–ந்தேதி பாகிஸ்தான் சென்று பயங்கரவாதிகள் முகாம்களை லேசர் குண்டுகள் போட்டு துவம்சம் செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வெளியை அந்த நாட்டின் இம்ரான்கான் அரசு மூடி வைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் இம்ரான்கான் அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், பாகிஸ்தானும் ஒப்புதல் வழங்கியதாகவும் தகவல் வெளியாகியது.

இப்போது பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்காது என தெரியவந்துள்ளது. விவிஐபி விமானம் ஓமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக பிஷ்கேக் நகருக்கு செல்லும் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Next Story