காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் படை வீரர்கள் உயிரிழப்பு


காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் படை வீரர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 7:08 PM IST (Updated: 12 Jun 2019 7:08 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிஆர்பிஎப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மீண்டும் அதுபோன்ற ஒரு தாக்குதல் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆனந்த்நாக்கில் கேபி சவுக் பகுதியில் பேருந்து நிலையம் அருகே சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்  நடத்தியுள்ளனர். அப்போது பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்துள்ளனர். இருதரப்பு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை வெடித்துள்ளது. இதில்  பாதுகாப்பு படை தரப்பில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியாகியது. ஒரு பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டான். இருதரப்பு இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

அப்பகுதியை நோக்கி கூடுதல் படையினர் விரைந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட இடம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 4 பாதுகாப்பு படை வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு பயங்கரவாதிகள் தானியங்கி ஆயுதங்களை கொண்டு தாக்குதலை நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில ஆளுநர் சத்தியபால் மாலிக், பயங்கரவாதிகள் ஆயுதங்களை விடுத்து பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story