‘ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிப்பார்’ - கட்சி மேலிடம் உறுதி


‘ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக தொடர்ந்து நீடிப்பார்’ - கட்சி மேலிடம் உறுதி
x
தினத்தந்தி 13 Jun 2019 4:45 AM IST (Updated: 13 Jun 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து நீடிப்பார் என கட்சி மேலிடம் உறுதியாக கூறியுள்ளது.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 52 இடங்களை மட்டுமே பெற்று காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக கட்சியின் காரிய கமிட்டி கடந்த 25-ந் தேதி கூடியது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர் ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அவரது ராஜினாமா முடிவை காரிய கமிட்டி ஒருமனதாக நிராகரித்தது. எனினும் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில், ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், விரைவில் நடைபெற இருக்கும் அரியானா, காஷ்மீர், ஜார்கண்ட், மராட்டிய மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி வழிகாட்டுதலின் பேரில் நடந்த இந்த கூட்டத்தில் அகமது படேல், மல்லிகார்ஜூன கார்கே, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்துக்குப்பின் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் ஜி இருந்தார், இருக்கிறார், இனியும் இருப்பார். கட்சி தலைவராக தொடர்ந்து அவர் நீடிப்பார் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என திட்டவட்டமாக தெரிவித்தார்.


Next Story