சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்


சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள்
x
தினத்தந்தி 14 Jun 2019 5:53 PM IST (Updated: 14 Jun 2019 5:53 PM IST)
t-max-icont-min-icon

சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள் இடம்பெற்று உள்ளனர்.

சந்திராயன்-2  விண்கலம் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன்-2 விண்கலம் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

இந்நிலையில், சந்திராயன்-2 விண்கலத்தின் முக்கியமான பொறுப்பில் இரண்டு பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அதாவது இஸ்ரோவின் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளான முத்தையா வனிதா மற்றும் ரீத்து கரிதால் சந்திராயன் விண்கலத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

விஞ்ஞானி முத்தையா வனிதா சந்திராயன் திட்டத்தின் இயக்குநராக உள்ளார். திட்ட இயக்குநர் என்பது இந்த மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளின் தயாரிப்பு ஆகியவற்றை சரிபார்ப்பதும், இந்த விண்கலத்தை இறுதி வடிவமாக்கி விண்ணுக்கு அனுப்பும் வரை பொறுப்பேற்பதாகும். இந்த முக்கிய பொறுப்பில் விஞ்ஞானி முத்தையா வனிதா ஈடுபட்டுள்ளார். இவர் இஸ்ரோவின் பல முக்கிய விண்கல திட்டங்களில் வேலை பார்த்து உள்ளார்.

குறிப்பாக கார்டோசாட்-1, ஓசன்சாட்-2 உள்ளிட விண்கலங்களில் பணியாற்றியுள்ளார். அத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு இவர் ஆஸ்ட்ரோநாட்டிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா (Astronautical Society of India) இவருக்கு சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வழங்கியுள்ளது. மேலும் நேச்சர் என்ற சர்வதேச ஜர்னலில் 2019-ம் ஆண்டு கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில் வனிதா முத்தையா இடம்பெற்று இருந்தது  குறிப்பிடத்தக்கது.

மற்றொரு விஞ்ஞானியான ரீத்து கரிதால் சந்திராயன் திட்டத்தின் துணை செயல்பாடு இயக்குநராக உள்ளார். இவர் சந்திராயன் விண்கலத்தின் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி விருதை பெற்றவர். அத்துடன் இஸ்ரோவின் செவ்வாய் கிரக விண்கலம் மங்கள்யானில் பணியாற்றியுள்ளார்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன், இஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் விண்கலம் ஏவுவதற்கு பொறுப்பாக உள்ளார். இதற்கு முன்பு பெண்கள் தகவல்தொடர்பு மற்றும் பிற விண்கலங்களுக்கு ஏவும் பொறுப்பில் இருந்துள்ளனர் எனத் தெரிவித்தார். சந்திராயன்-2 விண்கலம் இந்தியாவிற்கு மிகவும் சவாலானதாக இருக்கும். ஏனென்றால் இதற்கு முன்பு நிலவில் வெற்றிகரமாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே விண்கலத்தை தரையிறக்கியுள்ளன. இந்தியாவும் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி இந்தப் பட்டியலில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story