‘வாயு’ புயல் மீண்டும் பாதை மாறியது: குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு


‘வாயு’ புயல் மீண்டும் பாதை மாறியது: குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2019 5:27 AM GMT (Updated: 2019-06-16T03:21:06+05:30)

அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தின் கட்ச் பகுதியை நாளை அல்லது மறுநாள் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காந்திநகர்,

அரபிக்கடலில் உருவான ‘வாயு’ புயல் குஜராத்தை நோக்கி நகர்ந்தது. இந்த புயல் கடந்த 13-ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே அதை எதிர்கொள்ளும் வகையில் மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி குஜராத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள 10 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். ரெயில், பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, மீனவர்களும் கடலுக்கு செல்லாமல் பாதுகாக்கப்பட்டனர். அங்கு எத்தகைய அசம்பாவிதங்களையும் எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் மீட்புக்குழுவினரும் தயாராக வைக்கப்பட்டனர்.

ஆனால் எதிர்பார்த்தபடி வாயு புயல் குஜராத் கடற்கரையை தாக்கவில்லை. குஜராத் கடலிலேயே நிலைகொண்டிருந்த இந்த புயல் புதன் இரவிலேயே பாதை மாறி குஜராத் கடலோர பகுதிக்கு இணையாக மேற்கு நோக்கி நகர்ந்தது. இதனால் குஜராத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது என கருதப்பட்டது.

ஆனால் மேற்கு நோக்கி நகர்ந்த ‘வாயு’ புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தின் கட்ச் பகுதியை நோக்கி திரும்ப வரும் என கண்டறியப்பட்டு உள்ளது. புயல் தற்போது வலுவிழந்து காணப்பட்டாலும், அது நாளை (திங்கட்கிழமை) அல்லது மறுநாள் (18-ந் தேதி) கட்ச் பகுதியை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதற்கிடையே புயல் தாக்கத்தால் குஜராத்தின் கடலோர பகுதியில் அமைந்துள்ள 13 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20 தாலுகாக்களில் சுமார் 50 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆனால் கிர் சோம்நாத் மாவட்டத்துக்கு உட்பட்ட சுத்ரபடா தாலுகாவில் 122 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

புயல் ஆபத்து நீங்கியதாக கருதப்பட்ட நிலையில், வாயு புயல் பாதை மாறி மீண்டும் கட்ச் பகுதியை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவித்து இருப்பது குஜராத் கடலோர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. அதேநேரம் இந்த புயல் மேலும் வலுவிழந்து கடலிலேயே செயலற்று போகும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story