நிபந்தனையுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் பதில்


நிபந்தனையுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் பதில்
x
தினத்தந்தி 16 Jun 2019 6:04 PM IST (Updated: 16 Jun 2019 6:04 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் அரசுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தயாரென போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கடந்த 10-ந்தேதி நோயாளி ஒருவரின் உறவினர்கள் தாக்கினர்.

 இதை கண்டித்து மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் 11-ந்தேதி முதல் போராட்டத்தில் இறங்கினர். 

இந்த போராட்டம் 6வது நாளாக நீடிக்கிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போராட்டக்காரர்களை தலைமைச் செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், மம்தா பானர்ஜி என்.ஆர்.எஸ். மருத்துவமனைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். இதனால் இழுபறி நீடித்தது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் அரசுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தயாரென போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பேச்சுவார்த்தை எங்கு நடைபெற வேண்டும் என்பதை மம்தா பானர்ஜியே தேர்வு செய்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ள மருத்துவர்கள், வெளிப்படையான பேச்சுவார்த்தையே மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

போராட்டம் நடத்தும் மருத்துவர்களின் குழு  ஆலோசனையை மேற்கொண்ட பின்னர் வெளியிட்டுள்ள தகவலில், இப்போது ஏற்பட்டுள்ள நிலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால் பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடைபெற வேண்டும். அங்கு மீடியாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். மூடிய அறையில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர். 

Next Story