தேசிய செய்திகள்

ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் - உத்தவ் தாக்கரே வலியுறுத்தல் + "||" + Emergency law should be brought in to build the Rama Temple - Uthav Thackeray's assertion

ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் - உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் -  உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
சிவசேனா எம்.பி.க்களுடன் அயோத்தியில் வழிபாடு நடத்திய உத்தவ் தாக்கரே, அங்கு ராமர் கோவில் கட்டுவதற்காக அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.
அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக் குரிய ராம ஜென்மபூமி- பாபர் மசூதி நிலத்தின் உரிமை தொடர் பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அங்கு ராமர் கோவில் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி முக்கியமானது.


அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் நடவடிக்கையை துரிதப்படுத்தும் வகையில் கடந்த நவம்பர் மாதம் உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்றார். பின்னர் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபின் மீண்டும் அயோத்தி வருவேன் என அப்போது கூறியிருந்தார்.

அதன்படி நேற்று தனது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் கட்சி சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 18 எம்.பி.க்களுடன் நேற்று மீண்டும் அவர் அயோத்தி சென்றார். இதற்காக சிவசேனா எம்.பி.க்கள் அனைவரும் நேற்று முன்தினமே அயோத்தியில் முகாமிட்டு இருந்தனர்.

பின்னர், அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள ராமர் கோவிலில் நேற்று காலையில் உத்தவ் தாக்கரே மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் வழிபாடு செய்தனர். பின்னர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தி வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் இருக்கிறது. ஆனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்கான துணிச்சல் பிரதமர் மோடிக்கு உண்டு. அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான முயற்சியை அரசு மேற்கொண்டால் யாரும் தடுக்கமாட்டார்கள்.

ராமர் கோவில் கட்டுவதில் சிவசேனா மட்டுமல்ல, உலகின் ஒட்டுமொத்த இந்துக்களும் உறுதியாக இருக்கிறார்கள். இந்த பிரச்சினை அனைத்து இந்துக்களும் சம்பந்தப்பட்டது ஆகும். எனவே விரைவில் ராமர் கோவில் கட்ட வேண்டும். சட்டம் இயற்றி, கோவில் கட்ட வேண்டும்.

எங்களை பொறுத்தவரை ராமர் கோவில் என்பது நம்பிக்கை சார்ந்ததே தவிர, அரசியல் சார்பானது அல்ல. சிவசேனாவோ, பா.ஜனதாவோ, இந்துத்துவாவை வலிமையாக்கவே நாங்கள் உழைத்து வருகிறோம். இதை புரிந்து கொண்டதால்தான் மோடி அரசு அதிக எம்.பி.க்களுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிப்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

மராட்டியத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பா.ஜனதாவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே உத்தவ் தாக்கரே இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தாக்கரேவின் இந்த பயணத்தை தேர்தல் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது என சிவசேனா கூறியுள்ளது.


ஆசிரியரின் தேர்வுகள்...