புல்வாமாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி - பாகிஸ்தான் உளவு தகவலால் பரபரப்பு


புல்வாமாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி - பாகிஸ்தான் உளவு தகவலால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Jun 2019 11:16 PM GMT (Updated: 16 Jun 2019 11:16 PM GMT)

புல்வாமாவில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி நடந்துள்ளது. இதுகுறித்த பாகிஸ்தான் உளவு தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் விடுமுறை முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பஸ்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அவர்களது பஸ்கள், ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தபோது, அவற்றை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவன் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. இதில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம், இந்திய, பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தின.

இந்த நிலையில் புல்வாமாவில் அவந்திப்போரா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் (ஐ.இ.டி.) நிரப்பிய வாகனத்தை கொண்டு தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி செய்துள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தானுக்கு உளவு தகவல்கள் கிடைத்துள்ளன.

உடனடியாக அங்கு உள்ள இந்திய தூதரகத்தில் இந்த உளவு தகவலை பாகிஸ்தான் பகிர்ந்து கொண்டது. இதே போன்று அமெரிக்காவுக்கும் பாகிஸ்தான் தகவல் கூறி உள்ளது.

எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டக்கூடாது, இந்தியா பதிலடி தரும் நிலை வரக்கூடாது, சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்கள் வரக்கூடாது என்பதால்தான் இந்த உளவு தகவலை இந்தியாவிடமும், அமெரிக்காவிடமும் பாகிஸ்தான் பகிர்ந்து கொண்டுள்ளதாக அந்த நாட்டின் உயர் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

புல்வாமாவில் கடந்த மாதம் 24-ந் தேதி பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கி சண்டையில், ஜாகீர் மூசா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதத்தில் புதிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி செய்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அன்சார் காஜ்வாத் உல் இந்த் அமைப்பின் தளபதி புர்ஹான் வானியின் நெருங்கிய கூட்டாளிதான் ஜாகீர் மூசா என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் உளவு தகவலை அடுத்து காஷ்மீரில் குறிப்பாக புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் பாதுகாப்பு படையினர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகள், ராணுவ தளங்கள் கூடுதல் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.


Next Story