சென்னை அதிகாரி உள்பட மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி மூத்த அதிகாரிகள் 15 பேர் அதிரடி நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை


சென்னை அதிகாரி உள்பட மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி மூத்த அதிகாரிகள் 15 பேர் அதிரடி நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Jun 2019 5:49 PM IST (Updated: 19 Jun 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஊழல், லஞ்ச வழக்குகள் காரணமாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறையின் சென்னை அதிகாரி உள்பட 15 மூத்த அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

மத்தியில் 2-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அரசு அமைந்துள்ளது. புதிய அரசு அமைந்ததும் லஞ்சம், ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 11-ந் தேதி வருமான வரித்துறையின் 12 மூத்த அதிகாரிகள் லஞ்ச புகார்கள் மற்றும் தவறான நடவடிக்கைகள் காரணமாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் லஞ்சம், ஊழல் மற்றும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்தல் ஆகிய புகார்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ள மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத்தின் 15 மூத்த அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் முதன்மை கமிஷனரில் இருந்து உதவி கமிஷனர் வரை உள்ள உயர் பதவிகளில் இருந்தவர்கள் என நிதித்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த 15 பேரில் டெல்லியில் பணியாற்றிய முதன்மை கமிஷனர் அனூப் ஸ்ரீவஸ்தவாவும் ஒருவர். இவர் தற்போது மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரிய கூடுதல் டைரக்டர் ஜெனரலாக (தணிக்கை) பணியாற்றி வந்தார். இவர் மீது ஒரு கட்டுமான நிறுவனம் நிலம் வாங்குவதற்கு சட்டவிரோதமாக தடையில்லா சான்று பெறுவதற்கு சாதகமாக செயல்பட்டதாக 1996-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

2012-ம் ஆண்டு இவர் ஒரு இறக்குமதியாளரின் சுங்க வரி ஏய்ப்பை மூடிமறைக்க லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தது. இவர் மீது குறிப்பிட்ட சிலரை கைது செய்யவைப்பது, தொந்தரவு கொடுப்பது, கட்டாயப்படுத்தி பணம் பெறுவது போன்ற புகார்களும் உள்ளன.

சென்னையில் பணியாற்றிய கமிஷனர் ஜி.ஸ்ரீஹர்ஷா என்பவர் மீது ரூ.2.24 கோடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது. இவரும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி இணை கமிஷனர் நளின்குமார் என்பவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்த இவரையும் நேற்று மத்திய அரசு பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுபோல டெல்லி, கொல்கத்தா, விசாகப்பட்டினம், அலகாபாத், புவனேசுவரம் போன்ற பல நகரங்களில் பணியாற்றி ஊழல் வழக்குகளில் சிக்கிய அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி நிதித்துறை அமைச்சகம் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில், “அடிப்படை விதிகள் 56 (ஜே) பிரிவின்படி உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்திய வருவாய் பணிகளில் பணியாற்றி வந்த 15 அதிகாரிகளை பொதுநலன் கருதி உடனடியாக நீக்கி இந்திய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.


Next Story