ஆர்.எஸ்.எஸ். வழிமுறையை கடைபிடித்தால்தான் காங்கிரஸ் முன்னேறும் - முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகாய்


ஆர்.எஸ்.எஸ். வழிமுறையை கடைபிடித்தால்தான் காங்கிரஸ் முன்னேறும் - முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகாய்
x
தினத்தந்தி 19 Jun 2019 5:51 PM IST (Updated: 19 Jun 2019 6:37 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.எஸ். வழிமுறையை கடைபிடித்தால்தான் காங்கிரஸ் முன்னேறும் என முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.

2014 தேர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி சொல்லும்படியாக பெரிய வெற்றியை தனதாக்கவில்லை. 2019 தேர்தலிலும் பா.ஜனதாவிற்கு எதிரான அலையை ஒருங்கிணைக்க தவறியது, மீண்டும் மோசமான தோல்வியை தழுவியது. மக்கள் உடனான நேரடி தொடர்பை அக்கட்சி இழந்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. உ.பி.யில் 2022 தேர்தலை குறிவைத்து மக்களை வாரம் இருமுறை சந்திக்க பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். வழிமுறையை  காங்கிரஸ்  கடைபிடித்தால்தான் முன்னேறும் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார். 

தருண் கோகாய் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய தடைக்கல் மக்களுடனான தொடர்பை இழந்தது. இப்போது மதரீதியிலான கொள்கையில்லாது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழிமுறையைப் பின்பற்றி மக்களுடனான தொடர்பை ஏற்படுத்த வேண்டும். அப்படி நடந்தால்தான் 2021 சட்டசபைத் தேர்தலில் 80 இடங்களை வெல்ல முடியும் எனக் கூறியுள்ளார். வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களில் 6 மாநிலங்களில் பா.ஜனதா தனித்தோ, கூட்டணியுடனோ ஆட்சி செய்கிறது. அசாம் மாநிலத்தில் 2021-ல் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் தருண் கோகாய் வெற்றிக்கு மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
 
மக்களின் ஆசைகள், விருப்பங்கள், தேவைகளை காங்கிரஸ் புரிந்து கொள்ள ஆர்.எஸ்.எஸ். வழிமுறையை கடைபிடிக்க வேண்டும். அதுபோன்றதொரு அமைப்பை உருவாக்கி மக்களை திரட்ட வேண்டும். மக்களின் உணர்வுகளை கணித்து பா.ஜனதா தலைமை அரசை குறிவைத்து 80 இடங்களை பெற காங்கிரஸ் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியது உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story