டெல்லியில் பிரதமர் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம் : அ.தி.மு.க.வுக்கு ஏன் அனுமதி மறுப்பு?


டெல்லியில் பிரதமர் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம் : அ.தி.மு.க.வுக்கு ஏன் அனுமதி மறுப்பு?
x
தினத்தந்தி 20 Jun 2019 4:32 PM IST (Updated: 20 Jun 2019 4:32 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விமானம் மூலம் உடனே சென்னை திரும்பினார்.

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

20 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம்ஆத்மி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட 6 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பா.ஜனதா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அ.தி.மு.க. சார்பில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மேல்-சபை அ.தி.மு.க. தலைவர் நவநீதகிருஷ்ணன் இருவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று டெல்லி சென்றிருந்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் நடந்த அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சி.வி. சண்முகம் சென்றபோது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.

கட்சியின் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில் இருப்பவர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் அவர் கூட்டத்துக்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதிகாரிகள் அதையும் ஏற்கவில்லை. பிரதமர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டம் மிக, மிக முக்கியமானது என்பதால் கட்சி தலைவருக்கு பதில் வேறு எந்த பிரதிநிதியையும் அனுமதிக்க இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனால் ஏமாற்றம் அடைந்த அமைச்சர் சி.வி. சண்முகம் ஏமாற்றத்துடன் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர் விமானம் மூலம் உடனே சென்னை திரும்பினார்.

பிரதமர் கூட்டிய இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தவிர அவைத்தலைவர் என்ற முறையில் மதுசூதனன் பங்கேற்க மத்திய பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோதி கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக மதுசூதனன் டெல்லி செல்ல இயலவில்லை.

இதனால் பிரதமர் நடத்திய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் யாரும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

Next Story