தற்கொலை வீடியோக்களை பார்த்து தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சிறுமி - நாக்பூரில் பரிதாபம்


தற்கொலை வீடியோக்களை பார்த்து தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சிறுமி - நாக்பூரில் பரிதாபம்
x
தினத்தந்தி 1 July 2019 4:00 AM IST (Updated: 1 July 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

வலைதளத்தில் தற்கொலை சம்பந்தமான வீடியோக்களை பார்த்து, சிறுமி ஒருவர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூர், ஹன்சாபுரி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி சிகா ரதோட். இந்த சிறுமி தனது தந்தையின் செல்போனில் ‘யூ’ டியூபில் வீடியோ பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

இந்தநிலையில் சம்பவத்தன்று சிறுமி தனது தந்தையின் செல்போனில் தற்கொலை சம்பந்தமான சில வீடியோ பதிவுகளை பார்த்துள்ளார். மேலும் இது குறித்து தனது தாயிடமும் கூறியுள்ளார். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சிறுமியின் தாய், அந்த வீடியோக்கள் தனது மகளின் உயிரை பறிக்கப்போகிறது என்பதை உணரவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் சிறுமி சிகா ரதோட் தனது வீட்டில் இருந்த பிளாஸ்டிக் கயிற்றை மின் விசிறியில் கட்டி, அதில் தூக்குமாட்டி தொங்கினாள்.

இந்த நேரத்தில் சத்தம்கேட்டு அங்கு சென்ற சிறுமியின் தங்கை, தனது அக்காள் சிகா ரதோட் தூக்கில் தொங்கியபடி துடித்துக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். உடனடியாக பதறி அடித்துக்கொண்டு சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தாள்.

இதைக்கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவந்த பெற்றோர் உடனடியாக மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமி தற்கொலை வீடியோக்களை பார்த்து அதைப்போல செய்ய முயற்சி செய்ததால் இந்த விபரீதம் நேர்ந்ததா? அல்லது இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story