விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்களுக்கு அழைப்பு: மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்


விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்களுக்கு அழைப்பு: மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 30 Jun 2019 11:30 PM GMT (Updated: 30 Jun 2019 9:45 PM GMT)

மழைநீர் சேகரிப்பை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் எனவும், நீர் சேகரிப்பு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் முன்வர வேண்டும் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தனது முந்தைய ஆட்சியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார். ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) எனப்படும் இந்த நிகழ்ச்சி, நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த பிப்ரவரி மாதத்துடன் நிறுத்தப்பட்டது.

பின்னர் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்று உள்ள நிலையில், மோடி தனது ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியை மீண்டும் தொடங்க முடிவு செய்தார். அதன்படி பிரதமர் மோடியின் 2-வது பதவிக்காலத்தின் முதல் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.

இதில் நாடாளுமன்ற தேர்தல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை, நெருக்கடி நிலை பிரகடனம் செய்ததன் 44-வது ஆண்டு தினம் அனுசரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் பேசும்போது கூறியதாவது:-

முந்தைய ‘மன் கீ பாத்’ தொடரின் கடைசி நிகழ்ச்சியான கடந்த பிப்ரவரி மாத உரையில் நான் பேசும்போது, நாம் 3 அல்லது 4 மாதங்களில் மீண்டும் சந்திப்போம் என நான் கூறியிருந்தேன். அந்த நம்பிக்கை மோடியுடையது அல்ல. மாறாக மக்களாகிய உங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. நீங்கள்தான் நம்பிக்கையின் தூண்களாக உங்களையே உருமாற்றிக் கொண்டீர்கள்.

உண்மையை சொன்னால், நான் மீண்டும் வரவில்லை. நீங்கள்தான் என்னை மீண்டும் அழைத்து வந்திருக்கிறீர்கள். நீங்கள்தான் என்னை இங்கு, இந்த நிலையில் வைத்திருக்கிறீர்கள். அத்துடன் மீண்டும் உங்களுடன் பேசும் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறீர்கள்.

நாடாளுமன்ற தேர்தல் பரபரப்புக்கு இடையே நான் கேதார்நாத் சென்றது ஏன்? என பலர் என்னிடம் கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை அந்த பயணம், என்னை நானே சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், நாட்டின் 91 கோடி வாக்காளர்களில், 61 கோடி பேர் வாக்களித்து இருக்கின்றனர். சீனாவை விட்டுவிட்டு பார்த்தால், வேறு எந்த நாட்டின் மக்கள் தொகையை விட இது அதிகம் ஆகும். நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை, அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகம் ஆகும். இந்தியாவின் வாக்காளர்களின் எண்ணிக்கை ஐரோப்பாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விட அதிகம்.

இந்த தேர்தலில் அதிகமான பெண்கள் வாக்களித்துள்ளனர். ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏறக்குறைய சமமாக பெண்களும் வாக்களித்திருப்பது ஒரு வேளை இதுவே முதல்முறையாக இருக்கலாம். இதைப்போல சாதனை அளவாக நாடாளுமன்றத்துக்கு 78 பெண் எம்.பி.க்கள் கிடைத்து உள்ளனர்.

லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரவு-பகலாக பணிபுரிந்து இந்த தேர்தலை நடத்தி உள்ளனர். 3 லட்சம் மத்திய பாதுகாப்பு படையினர், 20 லட்சம் போலீசார் இணைந்து நேர்மையான, சுதந்திரமான தேர்தலை உறுதி செய்துள்ளனர். இந்த தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்ததற்காக தேர்தல் கமிஷன் மற்றும் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கெள்கிறேன்.

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. நீர் நிலைகள் வற்றிப்போய், நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. எனவே மழைநீரை சேமிக்க வேண்டும். இந்திய குடிமக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபலங்கள் முன்வர வேண்டும்.

ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறையில் நீரை சேமிக்கலாம். ஆனால் நோக்கம் ஒன்றுதான். ஒவ்வொரு துளி நீரும் சேமிக்கப்பட வேண்டும். தண்ணீர் சேகரிப்பில் பாரம்பரிய முறைகள் பற்றிய அறிவை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். தண்ணீர் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் தனிநபர் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரிந்தால், அதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதற்காக ‘ஜன்சக்தி4ஜல்சக்தி’ என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். தூய்மை திட்டம் போல மழைநீர் சேகரிப்பையும் மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

நாள்தோறும் வேளை தவறாது உண்போருக்கு, பசியின் கொடுமை பற்றி தெரியாது. அதைப்போல எந்த ஒரு பொருளும் நமது அருகில் இருக்கும்போது அதன் மகத்துவத்தை நாம் குறைவாக மதிப்பீடு செய்கிறோம். இதைப்போலத்தான் தினந்தோறும் ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கும் நமக்கு அதன் அருமை தெரியாது. யாராவது ஒருவர் அதை நம்மிடம் இருந்து பறிக்கும்போது தான் அதன் அருமைகளை உணர்வோம்.

அவசர நிலை காலத்தில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், தன்னிடம் இருந்த எதையோ யாரோ பறித்து செல்வதாக உணரத் தொடங்கினர். அவர்கள் மனதில் கோபம் கொப்பளித்துக்கொண்டு இருந்தது. தொலைக்கப்பட்ட ஜனநாயகத்துக்காக ஒரு துடிப்பு இருந்தது. அது 1977-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெளிப்பட்டது. மக்கள் பிற உரிமைகள் மற்றும் தேவைகள் பற்றி கவலைப்படாமல், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வாக்களித்தனர். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வேலூர் மக்களுக்கு பிரதமர் பாராட்டு

‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் நாட்டின் குடிநீர் பற்றாக்குறை குறித்து வருத்தம் வெளியிட்ட பிரதமர் மோடி, அதேநேரம் நாட்டின் சில பகுதிகளில் நடைபெறும் நீர் மேலாண்மை பணிகளை பாராட்டவும் தவறவில்லை. அப்படி வேலூர் மக்களின் நதி தூய்மைப்பணியை குறிப்பிட்டு பாராட்டி பேசினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் ஓடும் நாக நதியை தூய்மைப்படுத்த கிராம மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் இணைந்து உழைத்தனர். இதில் பெண்களின் பங்களிப்பையும் கவனித்தேன். இது நீர் மேலாண்மைக்கு சிறந்த உதாரணம் ஆகும்’ என்று குறிப்பிட்டார்.


Next Story