நாட்டின் சொத்துகளை தனிநபர்களுக்கு மலிவான விலைக்கு அரசு விற்றுவிடப் பார்க்கிறது -சோனியாகாந்தி ஆவேசம்


நாட்டின் சொத்துகளை தனிநபர்களுக்கு மலிவான விலைக்கு அரசு விற்றுவிடப் பார்க்கிறது -சோனியாகாந்தி ஆவேசம்
x
தினத்தந்தி 2 July 2019 11:08 AM GMT (Updated: 2 July 2019 11:08 AM GMT)

இந்த நாட்டின் சொத்துகளை எல்லாம் ஒருசில தனிநபர்களுக்கு மலிவான விலையில் இந்த அரசு விற்றுவிடப் பார்க்கிறது என்று சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.

புதுடெல்லி: 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதியான ரேபரேலி நகரில் உள்ள அதிநவீன ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்பட ரெயில்வே துறையை சேர்ந்த 6 அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காரசாரமாக உரையாற்றினார். 

இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் அனைத்தையும் தனியார் மயமாக்கும் நோக்கத்தின் முதல்படியாகும். இந்த நாட்டின் சொத்துகளை எல்லாம் ஒருசில தனிநபர்களுக்கு மலிவான விலையில் இந்த அரசு விற்றுவிடப் பார்க்கிறது என்று குற்றம்சாட்டிய சோனியா காந்தி, இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் தெரிவித்தார். 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு முன்னோடியாக ஏராளமான பணத்தை முதலீடு செய்து ரேபரேலியில் உள்ள அதிநவீன ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இன்று மிகக்குறைந்த செலவில் தரமான ரெயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகிறது.

சுமார் 2 ஆயிரம் பேர் இங்கு பணியாற்றுகிறார்கள். இதை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்தது ஏன்? என்பது புரியவில்லை. பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கம் மக்களின் நலம்சார்ந்ததாகதான் இருக்க வேண்டும். முதலாளித்துவத்தை ஆதரிப்பதாக இருக்க கூடாது என்றார். 

எச்.ஏ.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் இன்று தள்ளாட்டத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய சோனியா காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பொதுத்துறை நிறுவனங்களை நவீன இந்தியாவின் கோவில்கள் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்று இந்த கோவில்களை ஆபத்து சூழ்ந்திருப்பதை பார்க்கும்போது கவலையாக உள்ளது என்று தெரிவித்தார்.

Next Story