தேசிய செய்திகள்

தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் - ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல் + "||" + Rs 500 crore to be allocated for the cleanup of the Thamirabarani river - Gnanadiraviyam MP Emphasis

தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் - ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்

தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் - ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தல்
தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்த ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ஞானதிரவியம் எம்.பி. வலியுறுத்தினார்.
புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் ஞானதிரவியம் எம்.பி. தனது கன்னிப்பேச்சை தொடர்ந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

எனது நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மிக முக்கிய புண்ணிய நதியான தாமிரபரணி நதியை பற்றி இந்த மாமன்றத்தில் எனது கன்னி உரையை நிகழ்த்துகிறேன். தாமிரபரணி ஆறு அகஸ்தியர் தவமிருந்த பொதிகை மலையில் உற்பத்தியாகி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ள திருச்செந்தூர் அருகே கடலில் கலக்கிறது. தாமிரபரணியின் மொத்த நீளம் 126 கிலோமீட்டராகும்.


தாமிரபரணி ஆறு தொன்மையான புண்ணியநதி. இந்த நதியின் கரையோரம் நவகைலாயங்கள் மற்றும் நவதிருப்பதிகள் உள்ளன. மேலும் ஆழ்வார்களும், நாயன்மார்களும் இந்த நதிக்கரையில் தான் வாழ்ந்தனர். தாமிரபரணி நதியின் கீழ் 144 புண்ணிய தீர்த்த கட்டங்கள் உள்ளன. வடஇந்தியாவில் நடந்த கும்பமேளாவை போல் தாமிரபரணி புஷ்கரணி 144 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு தான் நடைபெற்றது. இந்த புஷ்கரணிக்கு அரசு நிதி ஒதுக்கப்படவில்லை.

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே 8 தடுப்பணைகளும், 11 வாய்க்கால்களும் கட்டப்பட்டு, 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தாமிரபரணி நதியின் கீழ் சுமார் 500 உறைகிணறுகள் உள்ளன. தாமிரபரணி நதி மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு தனித்தனியாக கூட்டுக்குடிநீர் திட்டங்கள் அமையப்பெற்று பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த புண்ணிய நதியானது தொழிற்சாலை ரசாயன கழிவுகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி சாக்கடை கழிவுகளால் பெருமளவு பாதிக்கப்பட்டு அதிக அளவில் மாசுபட்டுள்ளது.

மேலும் குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்பட்டது போன்று ஆற்றின் இருபுறமும் காங்கிரீட் தடுப்புச்சுவர் கட்டி கழிவுகள் கலப்பதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். தாமிரபரணி ஆறு 126 கிலோமீட்டர் தூரம் மட்டுமே உள்ளதால், நர்மதா ஆற்றில் நிறைவேற்றப்பட்டதைவிட மிகவும் குறைந்த மதிப்பீட்டிலேயே இந்த பணியை நிறைவேற்றி விடலாம். தாமிரபரணியின் குறுக்கே அன்றைய முதல்- அமைச்சர் கருணாநிதியால் 2009-ம் ஆண்டில் தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த ரூ.369 கோடி ஒதுக்கப்பட்டும், அதனை அதற்கு பிறகு வந்த அ.தி.மு.க. அரசு 8 ஆண்டுகள் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. தற்போது அதனை செயல்படுத்த வேண்டுமென்றால் 896 கோடிக்கு மேல் செலவாகும்.

தாமிரபரணியில் ஆண்டுதோறும் 13.5 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் மேற்படி நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு 2.8 டி.எம்.சி. நீரை அனுப்பினாலே போதுமானது. எனவே, இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாகும். இந்த தாமிரபரணி நதி கங்கைக்கு இணையான புண்ணிய நதியாகும். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சுத்தம் செய்தால் வற்றாத ஜீவநதியை நல்லமுறையில் பொதுமக்கள் உபயோகிக்கும் வகையில் காப்பாற்றலாம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் மூன்று தாலுகாக்களில் அமைந்திருக்கும் 55 குளங்கள் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் முழுவதுமாக பாசன வசதி பெறுவதுடன் குடிநீர் பற்றாக்குறையே இல்லாத நிலையை கொண்டு வரலாம்.

ஆகையால் தாமிரபரணி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றியும், சாக்கடை கழிவுகள் கலப்பதை தடுத்தும், புண்ணிய நதியை தூய்மைப்படுத்திட போர்க்கால அடிப்படையில் ரூ.500 கோடி ஒதுக்கிட மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.